பொது

நெங்கிரியின் உள்ளூர் பிரச்சனைகளைக் களைய தேமு முனையும்

03/08/2024 04:48 PM

குவா மூசாங், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  நெங்கிரி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தீர்வு காணாத உள்ளூர் பிரச்சனைகளைக் களைவதற்கு தேசிய முன்னணி முக்கியத்துவம் அளிக்கும்.

தேர்தல் இயக்குநரான, டான் ஶ்ரீ தெங்கு ரஸாலி ஹம்சாவின் ஒருங்கிணைப்பின் கீழ் கட்சி தேர்தல் கேந்திரம், மக்களை ஒன்றிணைக்க அனைத்து இருபது வாக்குப்பதிவு மாவட்ட மையங்களையும் இலக்கிட்டுள்ளதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

"உள்ளூர் பிரச்சனையே நெங்கிரியின் முதன்மைப் பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர்த்து தேசிய அளவிலான பிரச்சனைகள் அங்கு எழுந்தால் ஒவ்வொரு மட்டத்திலும் கட்சி கேந்திரத்தால் அதற்கும் விளக்கமளிக்கப்படும்", என்றார் அவர்.

இன்று, குவா மூசாங் பெர்டானா மண்டபத்தில் நடைபெற்ற வேட்புமனு தாக்கல் அறிவிப்பிற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

மேலும், தேசிய முன்னணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர், குவா மூசாங் தொகுதி மாவட்டத்தின் இளைஞர் பிரிவின் ஒருமித்த குரலாக விளங்குவார் என்பது மறுப்பதற்கில்லை என்றும் அவர் உறுதி கூறினார்.

இதனிடையே, முந்தைய இரண்டு தேர்தல்களில் கிடைத்த அனுபவத்தைத் தொடர்ந்து, இந்த இடைத் தேர்தலில் நெங்கிரி சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் விவேகமான முறையில் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்வர் என்றும் டாக்டர் அஹ்மாட் சாஹிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)