பொது

உலகத் தலைவர்கள் & ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஹமாஸ் தலைவர் உடல் நல்லடக்கம்

03/08/2024 05:45 PM

கோலாலம்பூர், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  கட்டார், டோஹாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் நல்லடக்கச் சடங்கில் அரபு, மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடன் இதர நாட்டுத் தலைவர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஹனியேவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது, பாலஸ்தீனத் தலைவராகிய அவர் மீது கொண்டுள்ள மரியாதை மற்றும் உயர்மதிப்பை புலப்படுத்துவதாக மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து அங்குச் சென்றிருந்த உள்துறை துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சூல் அனுவார் நசாரா கூறினார்.

டோஹாவில் உள்ள மலேசிய தூதரகப் பிரதிநிதியால், அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறிய ஷம்சூல் அனுவார், ஹனியேவின் உடல் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு அங்குள்ள இமாம் பண்டார் லுசாயில் மையத்து கொல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

ஈரான், தெஹ்ரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கடந்த ஜூலை 31-ஆம் தேதி பின்னிரவு இரண்டு மணியளவில் கொல்லப்பட்டார்.

இதனிடையே, ஈரானின் புதிய அதிபர் மசாவுட் பெசெஷ்கியனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹனியே தெஹ்ரான் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)