உலகம்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 358 ஆக அதிகரிப்பு

03/08/2024 06:05 PM

வயநாடு, 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கேரளா, வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.

இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கியவர்களில், 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், 250 பேரை காணவில்லை என்றும் கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது.

வயநாட்டில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இயற்கை சீற்றத்தினால், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய 3 கிராமங்கள் அடியோடு அழிந்தன.

இன்னும், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

இதனிடையே, காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

சூரல்மலை பகுதியில் மீட்புப் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன.

முண்டக்கைக்கு செல்வதற்கு ராணுவம் இரும்புப் பாலம் அமைத்து விட்டதால் நேற்று காலை முதல் இங்கு மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

பல அடி ஆழத்தில் குவிந்து கிடக்கும் சகதியை தோண்டியும், இடிந்து கிடக்கும் வீடுகள், கட்டிடங்களுக்கு உள்ளும் நவீன உபகரணங்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502