பொது

பள்ளிகளுக்கான நன்கொடை விவகாரத்தை இனியும் திரித்துக் கூறாதீர்

03/08/2024 06:03 PM

நிபோங் திபால், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளைத் திரித்துக் கூறுவதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கல்வியமைச்சு நினைவூட்டியுள்ளது.

ஏனெனில், சம்பந்தப்பட்ட விவகாரம் ஒரு தீர்வுக்கு வந்துவிட்டது என்று தாம் கருத்துவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியதோடு, தற்போதுள்ள வழிகாட்டிகளைப் பின்பற்றுவதற்கான அமைச்சரவையின் முடிவையும் தமது தரப்பு மதிப்பதாகத் தெரிவித்தார்.

"இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன். மேலும் பள்ளிக்கு நன்கொடை வழங்கும் வழிகாட்டிகள் தொடர்பில் அமைச்சரவையின் முடிவிற்கும் நாங்கள் ஒருமித்து இணங்குகிறோம். எனவே, இவ்விவகாரம் தலைத்தூக்காது என்று நான் நம்புகிறேன். மேலும் இவ்வேளையில் கல்வி வளர்ச்சி குறித்த முக்கியமான விவகாரங்களில் அமைச்சு கவனம் செலுத்தும்", என்றார் அவர்.

இன்று பினாங்கு நிபோங் திபாலில் உள்ள தாசெக் பெர்மாய் ஆரம்பப்பள்ளியில் ஆண் மற்றும் பெண்களுக்கான FIFA காற்பந்து விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு பேசினார்.

கடந்த மாதம், மதுபான நிறுவனம் ஒன்றிடமிருந்து நன்கொடை பெற்ற சீனப் பள்ளிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணையமைச்சர் அய்மான் அதிரா சாபு கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)