பொது

AI-இல் போலி உள்ளடக்கங்கள் பகிரப்படுவது தொடர்பில் கவனம் தேவை

04/08/2024 03:27 PM

கூலாய், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) --  நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சாரக் காலக்கட்டம் முழுவதும் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்கள் பகிரப்படுவது குறித்து கவனமாக இருக்குமாறு அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எந்தவொரு சட்டவிரோத உள்ளடக்கம் பகிரப்படுவதையும் கண்டறிய, அனைத்து சமூக ஊடகங்களையும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

''இந்த AI காலக்கட்டத்தில் காணொளியை உருவாக்குவது எளிதாகிவிட்டது. AI-ஐ பயன்படுத்தி காணொளி, படங்கள் உருவாக்கப்படுகிறது. இணைய மோசடி செய்பவர்கள் PMX, பிரபலங்கள் காணொளியை உருவாக்குகின்றனர். நாங்கள் ஒரு இடைத்தேர்தலை எதிர்நோக்கும்போது AI-ஐ பயன்படுத்தி வேண்டுமென்றே போலியான உள்ளடக்கத்தை உருவாக்கும் சாத்தியம் உள்ளது'', என்றார் அவர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கூலாய் நாடாளுமன்ற அளவில் நடைபெற்ற CEMERLANG HARI INI, GEMILANG ESOK எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் தியோ நி சிங் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அரச மலேசிய போலீஸ் படையுடன் இணைந்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)