பொது

விசா விலக்கு அமலாக்கத்தினால் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

04/08/2024 03:37 PM

கோலாலம்பூர், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இவ்வாண்டு மே மாதம் வரையில் சீனாவிலிருந்து மலேசியாவிற்கு வருகைப் புரிந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பதினொறு லட்சத்து எண்பத்து ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, இது நூற்று தொண்ணூற்று நான்கு விழுக்காடு அதிகமாகும்

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான விசா விலக்கு அமலாக்கத்தினால் இது உயர்ந்துள்ளதாக, சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், மலேசியாவிற்கு இடையிலான தொடர்பை விரிவுபடுத்திக்கொள்ளவும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் அழைப்பு விடுத்தார்.

உலக அளவில் உள்ள சுற்றுப் பயணிகளுக்கு அதிக வசதிகளையும் விருப்பத் தேர்வுகளையும் வழங்குவதற்கு, இதுபோன்ற திட்டங்களைப் பல்வேறு நாடுகளுடன் செயல்படுத்தப்படலாம்.

இது, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, சீனா, நிங்போவிலிருந்து கோலாலம்பூர் மற்றும் சபா, கோத்தா கினாபாலுவிற்கு ஏர் ஏசியாவின் முதல் நேரடி விமானப் பயணம் தொடங்கப்படவுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

நூற்று எண்பது பயணிகள் அமரக்கூடிய ஏர்பஸ் A320 ரக விமானம் வாரத்திற்கு மூன்று முறை செயல்படும் என்ற கூடுதல் தகவலையும் அவர் வழங்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)