பொது

முன்னாள் நிதியமைச்சரின் விண்ணப்பத்தை மறுத்தது அரசு தரப்பு

09/08/2024 04:41 PM

ஜாலான் டூத்தா, 09 ஆகஸ்ட் (பெர்னாமா) --  தமது சொத்துகளை அறிவிக்காமல், அறிவிக்கைக்கு இணங்கத் தவறியிருக்கும் வழக்கு விசாரணையை, வேறொரு செஷன்ஸ் நீதிமன்றத்தில், அதன் நீதிபதி முன் மேற்கொள்வதற்கு, முன்னாள் நிதியமைச்சர், துன் டாயிம் சைனுடின் செய்த விண்ணப்பத்தை அரசு தரப்பு இன்று மறுத்துள்ளது.

டாயிமின் துணைவியார், தோ புவான் ந'யிமா காலிட்டின் வழக்கையும் செவிமடுக்கும் நீதிபதி அசுரா அல்வி மிகவும் தகுதியான நீதிபதி என்றும், அவர் அவ்விரண்டு வழக்கு விசாரணைகளிலும் நியாயத்துடன் செயல்படுவார் என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர், டத்தோ வான் ஷஹாரூடின் வான் லடின் வாதிட்டார்.

விண்ணப்பதாரரின் ஆணைப் பத்திரத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் கடுமையான குற்றச்சாட்டு என்றும் வெறும் ஊகத்தின் அடிப்படையிலான வாதங்களை நீதிமன்றம் ஏற்க முடியாது என்றும் மற்றொரு அரசு தரப்பு வழக்கறிஞர், முஹமட் ஃபட்லி முஹமட் சம்ரி தெரிவித்தார்.

இதனிடையே, அத்தம்பதியர் சம்பந்தப்பட்ட வழக்கை ஒரே நீதிபதி விசாரித்தால், அதன் நம்பகத்தன்மை, சாட்சிகளின் ஏற்புடைமை மற்றும் அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களின் சுமை ஆகியவைக் குறித்து கேள்விகள் எழும்பும் என்று துன் டாயிம் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் ம.புரவலன் கூறினார்.

இவ்விண்ணம் தொடர்பான முடிவை அறிவிக்க, நீதிபதி அசுரா, ஆகஸ்ட் 27-ஆம் தேதியை நிர்ணயித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)