பொது

கூட்டரசு சட்ட முறையிலான அமைப்புகள் முன்னுதாரண மாற்றத்தை உருவாக்கி வெளிப்படையாக செயல்பட வேண்டும்

09/08/2024 05:26 PM

கோலாலம்பூர், 09 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கூட்டரசு சட்ட முறையிலான அமைப்புகள், முன்னுதாரண மாற்றத்தை உருவாக்கி மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்ற வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதன் உருவாக்கம், கட்டமைப்பு மற்றும் தொலைநோக்கு அம்சங்களை மதிப்பாய்வு செய்து, நல்லாட்சிக்கு முரணான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

ஒட்டு மொத்தமாக கூட்டரசு சட்ட முறையிலான அமைப்புகளின் அடைவுநிலை பெருமையளிக்கும் நிலையில் இருந்தாலும், அதன் உருவாக்கம் அசல் இலக்கிலிருந்து விலகாமல் இருப்பதை உறுதிசெய்ய சில மாற்றங்கள் அவசியம் என்று அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.

''அது ஏறக்குறைய, முழு கொள்கை மற்றும் செயல்முறை சம்பந்தப்பட்டது. இன்னும் கடுமையான மாற்றங்களைச் செய்ய விருப்புவோர், ஒன்று அல்லது இரண்டு கூடுதல் வரையறையற்ற மற்றும் கூடுதல் விதி மாற்றங்களை மட்டுமே செய்யக்கூடாது. முன்னுதாரண மாற்றம் என்பது அனைத்து நிலையிலும் இருக்க வேண்டும் என்பதை தலைமைத்துவத்தினர், குறிப்பாக சட்ட முறையிலான அமைப்புகளின் வாரியம் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில், கூட்டரசு சட்ட முறையிலான அமைப்புகளின் நிர்வாகம் மற்றும் நல்லாட்சி தொடர்பான வழிகாட்டியை அறிமுகப்படுத்தியபோது, பிரதமர் அவ்வாறு கூறினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-உம் தேசிய தலைமை கணக்காய்வாளரும், நல்லாட்சி மீறல் மற்றும் ஊழல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு, அனைத்து நிறுவனங்கள் மற்றும் கூட்டரசு சட்ட முறையிலான அமைப்புகளிடம் மிகுந்த கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)