பொது

அரசு தரப்பு துணை வழக்கறிஞரின் உத்தரவு கிடைத்தால் சூசைமாணிக்கத்தின் விசாரணை அறிக்கை மீண்டும் திறக்கப்படும்

09/08/2024 05:57 PM

ஈப்போ, 09 ஆகஸ்ட் (பெர்னாமா) --  கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த அரச மலேசிய கடற்படை அதிகாரி ஜெ.சூசை மாணிக்கத்தின் விசாரணை அறிக்கையை மீண்டும் திறப்பதற்கு அரசு தரப்பு துணை வழக்கறிஞரின் உத்தரவுக்கு பேராக் மாநில போலீஸ் காத்திருக்கிறது.

அதற்கான உத்தரவு பெறப்பட்டால், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு வகைப்படுத்தப்படலாம் என்று அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் தெரிவித்தார்.

''ஈப்போ உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதை நாங்கள் அறிவோம். அரசு தரப்பு துணை வழக்கறிஞரின் உத்தரவு கிடைத்தால் நாங்கள் மீண்டும் அந்த விசாரணை அறிக்கையைத் திறப்போம்'', என்றார் அவர்.

இன்று, பேராக் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அசிசி அதனைக் கூறினார்.

சூசைமாணிக்கத்தின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை மீண்டும் திறக்குமாறு LFL எனப்படும் Lawyers For Liberty தலைமையிலான 29 அரசு சாரா அமைப்புகள் நேற்று மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததாக அசிசி குறிப்பிட்டார்.

2018-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி, லூமூட், கெடி சுல்தான் இட்ரிசில் அதிகாரிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த சூசையின் மரணத்தை அதே ஆண்டு ஜூலை மாதம் ஈப்போ உயர் நீதிமன்றம் கொலையாக வகைப்படுத்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)