பொது

ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகளில் 967 அபராதங்கள் வெளியிடப்பட்டன

11/08/2024 04:52 PM

கோலாலம்பூர், 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேற்று காலை மணி 11 தொடங்கி இன்று அதிகாலை மணி ஐந்து வரையில் கோலாலம்பூரில் உள்ள ஐந்து பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகளில் மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது கவனம் செலுத்தப்பட்டன.

200-க்கும் அதிகமான அமலாக்க அதிகாரிகளும் உறுப்பினர்களும் இச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், ஈராயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு குற்றங்களுக்காக 967 சம்மன்களும் வெளியிடப்பட்டன. 

போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை, போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை உட்பட கூட்டரசுப் பிரதேச சாலைப் போக்குவரத்து துறை ஆகியவை இச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் ஆயோப் தெரிவித்தார். 

ஜாலான் பங்சார், சௌ கிட் மற்றும் செந்தூலை நோக்கிச் செல்லும் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா உட்பட அம்பாங் மற்றும் Bulatan Pahang-ஐ நோக்கிச் செல்லும் ஜாலான் துன் ரசாக்கில் இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ அஸ்ரி கூறினார்.

"சாலை குண்டர்களினால் ஏற்படும் இடையூறுகளைக் களைவதற்கு ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை விதிகளைப் பின்பற்றுமாறு நாங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம். மிகவும் ஆபத்தான நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்துபவர்கள்; சிக் செக் (zig zag), ராக்கெட் (roket) மற்றும் சூப்பர்மென் (superman) போன்ற பல ஆபத்தான சாகசங்களை மேற்கொள்பவர்களைச் சாலை போக்குவரத்துச் சட்டம் செக்‌ஷன் 42-இன் கீழ் கைது செய்தோம்," என்றார் அவர். 

29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில், மது மற்றும் போதைப் பொருளை உட்கொண்டு வாகனத்தைச் செலுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 18-இல் இருந்து 50 வயதிற்குட்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)