விளையாட்டு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அசிசுலுக்கு ஆதரவு வழங்கப்படும் - ஐ.எஸ்.என்

11/08/2024 06:26 PM

பாரிஸ், 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் கெய்ரின் பிரிவில் கலந்துகொள்ளவிருந்த நாட்டின் சைக்கிளோட்ட வீரர் டத்தோ அசிசுல் அஸ்னி அவாங் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு வழங்கப்படும் என்று தேசிய விளையாட்டுக் கழகம், ISN தெரிவித்துள்ளது.

தடைநீக்கம் தொடர்பிலான அவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, THE POCKET ROCKETMAN என்றழைக்கப்படும் அசிசுல் அஸ்னி-க்கு, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ள மலேசிய விளையாட்டு அணி திடமான ஆதரவை அளித்து வருவதாக, அவ்வணியின் தலைவர் டத்தோ ஹமிடின் முஹ்மட் அமின் கூறினார்.

சைக்கிள் ஓட்டும் தடத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, விரைந்து முன் நகர்ந்ததால், நேற்று நடைபெற்ற முதல் தேர்வு சுற்றுப் போட்டியில் டத்தோ அசிசுல் அஸ்னி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அம்முடிவை மலேசிய அணி கவலையுடன் ஏற்றுக் கொண்டாலும், 36 வயதான அசிசுல் அஸ்னிக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று ஐ.எஸ்.என் கூறியது.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் நாட்டிற்கான முதல் தங்கத்தைப் பெற்று தரும் வேட்கையில் இருந்த அசிசுல் அஸ்னியின் கனவு இந்தத் தகுதி நீக்கத்திற்குப் பிறகு காணல் நீரானது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502