பொது

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் தாக்கத்தை மலேசியா கண்காணிக்கும்

12/08/2024 06:05 PM

ஜாலான் பினாங், 12 ஆகஸ்ட் (பெர்னாமா) --  அனைத்துலக புவிசார் அரசியல் சூழல் மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் எந்தவொரு தாக்கத்தையும் மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும்.

புவிசார் அரசியல் விளைவுகளோடு அனைத்துலக ரீதியில் நிலவும் இதர காரணங்களையும் அரசாங்கம் கருத்தில் கொள்வதோடு, அவ்வப்போது அதன் நிலைமையையும் மதிப்பீடு செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''நாம் இப்போது சரியான தடத்தில் இருக்கிறோம். ஆனால் புவிசார் அரசியல் மற்றும் அனைத்துலக தாக்கத்தையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். அவ்வப்போது, நாம் அவற்றை மதிப்பீடு செய்ய முயற்சிக்கிறோம்'', என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில், 2024-ஆம் ஆண்டு மலேசிய வணிகமயமாக்கல் உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் அன்வார் இப்ராஹிம் அவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில், ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் ரஷ்யா-உக்ரேன் போர் உள்ளிட்ட வெளிப்புற காரணங்களால் மலேசியாவின் பொருளாதாரம் பாதிக்கின்றதா என்று வினவப்பட்டபோது பிரதமர் அதனை எடுத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)