பொது

மின்சார வாகனத்தின் பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு

12/08/2024 06:31 PM

ரெம்பாவ், 12 ஆகஸ்ட் (பெர்னாமா) --  EV எனப்படும் மின்சார வாகன தொழில்துறையின் முழு சுற்றுச்சூழல் அமைப்பும் பயனீட்டாளர்களின் வசதிக்காக நன்கு திட்டமிடப்பட்டிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும்.

அதோடு, எதிர்காலத்தில் அத்தகைய வாகனங்களை அதிகமானோர் பயன்படுத்துவதையும் அரசாங்கம் ஊக்குவிக்கும்.

மின்சார வாகனத்தை வாங்குவதா அல்லது ICE எனப்படும் எரிப்பொருள் இயந்திரப் பயன்பாட்டு வாகனத்தை வாங்குவதா என்பதை பரிசீலிப்பதில் மக்கள் இன்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதால் நாட்டில் அதன் கொள்முதலும் குறைவாகவே உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகின்றார்.

இன்று, நெகிரி செம்பிலான், ரெம்பாவ்-இல் நடைபெற்ற ESG குழுமத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் பேசினார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் வழிகாட்டியுடன் மின்னேற்ற நிலையங்களை அதிகப்படுத்துதல், வாகன நிபுணத்துவம் மற்றும் திறமையான மின்சார வாகன பணியாளர்களை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தளவாட சேவையில் ஈடுபட்டிருக்கும் வாகனங்களை மாற்றுவது தொடர்பான கொள்கையை போக்குவரத்து அமைச்சு வெளியிடவுள்ளதாக அந்தோணி லோக் கூறினார்.

சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அக்கொள்கை தொடர்பாக தமது தரப்பு துள்ளியமான ஆய்வை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

''புதிய டிரக்குகளை வழங்குவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தனியார் குறிப்பாகத் தளவாட சேவை நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களை புதிய டிரக்குகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தெளிவான கொள்கை வெளியிடப்படும்'', என்றார் அவர்.

அக்கொள்கை குறித்த தெளிவான விளக்கத்தை தாம் கூடிய விரைவில் அறிவிக்கவிருப்பதாக சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான லோக் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)