பொது

MAPPA-இல் பிரதமரின் முக்கிய அறிவிப்பு

13/08/2024 06:55 PM

கோலாலம்பூர், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) --  வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி, புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் 19-வது MAPPA எனப்படும் பொது சேவை பொறுப்பாணை நிகழ்ச்சியின்போது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பொது சேவை ஊதிய முறை, SSPA தொடர்பான முக்கிய அறிவிப்பை செய்வார்.

அந்த அறிவிப்பு, குறிப்பாக பொது சேவை ஊழியர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பொது நிர்வாகக் கழகத்தின் திறன் மேம்பாட்டுக்கான மூத்த துணை இயக்குநர், டத்தோ டாக்டர் ஹனிஃ ஜைனால் அபிடின் தெரிவித்தார்.

"இந்த முறை, MAPPA-வில் அரசாங்கம் தாக்கல் செய்யும் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இம்முறை மிகவும் சுவாரஸ்யமானது என்று நான் நம்புகிறேன். புதிய ஊதிய முறை தொடர்பான விஷயங்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான கோட்பாடுகளும் உள்ளன", என்றார் அவர்.

இன்று, பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளியேறிய Apa Khabar Malaysia நிகழ்ச்சியில் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தின் பொறுப்பாணை மற்றும் கொள்கைகளைப் பிரதமர் பகிர்ந்துக் கொள்ளும் தளமாக 19-வது MAPPA அமையும் என்பதால், ஏறக்குறைய ஏழாயிரம் பொது சேவை ஊழியர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் டாக்டர் ஹனிஃ தெளிவுப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)