பொது

மன, உடல் வளர்ச்சியில் குறைபாடுடையபிள்ளைகளைக் கையாள சிறப்பு அணுகுமுறைகள் - ஐ.ஓ.சி

13/08/2024 09:22 PM

கோலாலம்பூர், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மன, உடல் வளர்ச்சியில் குறைபாடு கொண்ட பிள்ளைகளை, வலிமை நிறைந்தவர்களாக, அறிவில் தேர்ந்தவர்களாக வளர்ப்பது, கூடுதல் சவால் என்பதால்,

அவர்களுக்கான சிறப்பு கற்பித்தலும் அவர்களை கையாள்வதற்கான அணுகுமுறைகளும், பிரேத்தியேக பயிற்சிகளின் மூலம் இந்நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பெற்றோருக்கு, குறிப்பாக பாலர்பள்ளி ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு, I-O-C எனப்படும் INCLUSIVE OUTDOOR CLASSROOM சங்கம் செயல்படுகின்றது.

ஒவ்வொரு குழந்தையும் சில மணி நேரங்கள் பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல், புதுமுகங்களுடன் இருக்கும் முதலிடம் பாலர் பள்ளியாக இருப்பதனால், அதன் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு அப்பயிற்சி வழங்கப்படுவதாக ஐ.ஓ.சி சங்கத்தின் செயலாளர் சிங்கம் முனியாண்டி தெரிவித்தார்.

எனினும், பெற்றோரும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இசை மற்றும் விளையாட்டு அம்சங்களை முதன்மையாகக் கொண்டு பெரும்பாலான பயிற்சிளையும் உத்திகளையும், ஐ.ஓ.சி சங்கம் வழங்குவதாக அவர் மேலும் விவரித்தார்.

இதனிடையே, இச்சங்கத்தின் பெயருக்கு ஏற்றார் போல், சிறப்புப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளும் வெளிப்புறத்தில் நடத்தப்படுவதாக சிங்கம் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு, இப்பிள்ளைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டே அவ்வாறு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பல நல்லுள்ளங்கள் IOC-க்கு மிகச் சிறந்த ஆதரவை நல்கி வந்தாலும், அதிகமான இளம் வயது தன்னார்வலர்களை தங்கள் தரப்பு எதிர்பார்ப்பதாகத் சிங்கம் கூறினார்.

வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 17-ஆம் தேதி, Kabin MPP ZON 3, JALAN USJ 12/2E முகவரியில் காலை மணி எட்டு தொடங்கி மாலை மணி நான்கு வரை நடத்தப்படும் இது குறித்த பட்டறை ஒன்றில் கலந்துகொள்ள விரும்புவோர் 011-2667 3396 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502