சிறப்புச் செய்தி

கொழுப்புச் சத்து நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தேவை

14/08/2024 08:44 PM

கோலாலம்பூர், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இறைச்சி வகைகள், அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டால், CHOLESTEROL எனப்படும் கொழுப்புச் சத்து சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், மனித உடலில் செல்களை உருவாக்கி, சீரமைக்கவும், ஹார்மோன்களை உருவாக்கவும், கொழுப்புச் சத்து உடலுக்கு தேவைப்படுகிறது.

தினசரி உட்கொள்ளும் உணவின் மூலம் உடலில் சேரும் கொழுப்புச் சத்து, தேவையான அளவை மீறினாலே உடல் உபாதைகளையும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்துகின்றது.

அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டாலும் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிகவும் அவசியமானது என்று வலியுறுத்தப்படுவதாக HEPATOLOGY எனப்படும் ஈரல் நோய் துறை மருத்துவர், டாக்டர் வினோத் ராஜ் மாணிக்கம் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.

அரிசி, ரொட்டி போன்று மாவுச்சத்துகள் அடங்கிய அத்தியாவசிய உணவுகளே காலப்போக்கில் உடலில் கொழுப்புச் சத்தை சேர்க்கின்றது என்பதை மக்கள் அறிய வேண்டும் என்று டாக்டர் வினோத் ராஜ் மாணிக்கம் கூறினார்.

''மாவுச்சத்து நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் அதிகம் கலந்துள்ளன. குறிப்பாக, அரிசி, சப்பாத்தி அல்லது அரிசியினால் உருவாக்கப்படும் தோசை, இட்லி ஆகியவை. அவை உடலில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

இதனிடையே, CHOLESTEROL-இல் LDL CHOLESTEROL கெட்ட கொழுப்புச் சத்து என்றும் HDL CHOLESTEROL நல்ல கொழுப்புச் சத்து என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நல்ல கொழுப்புச் சத்து, ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் அடைப்புகளை தடுப்புக்கும் திறனைக் கொண்டுள்ளன.

உடலில் அதிகமான கெட்ட கொழுப்புச் சத்து சேரும் போது காலப்போக்கில் ரத்தக்குழாய்களில் கொழுப்புகளை உருவாக்குகிறது.

இதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம், கல்லீரல் பிரச்சை ஏற்படும் அபாயம் அதிகரிப்பதோடு பல நேரங்களில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இரு கொழுப்புச் சத்துகளையும் சீராக வைத்திருப்பதற்கு உணவு முறைகளில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக, பழ வகைகள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

எனினும், கெட்ட கொழுப்புச் சத்து உடலில் சேர்வதை தவிர்க்க, மருத்துவ அணுகுமுறைகள் தேவைப்படுவயும், விளக்குகின்றார் டாக்டர் வினோத் ராஜ்.

''இந்தக் கெட்ட கொழுப்புச் சத்தை தடுக்க உடற்பயிற்சிகளும் உணவு கட்டுப்பாடும் ஓரளவிற்குதான் உதவி செய்யும். எனவே, மருத்துவரை அணுகி முறையான சிகிச்சைகளைப் பெற வேண்டும். மருத்துவர்கள் கொடுக்கும் மருத்துகளின் அளவை முறையாக கடைப்பிடித்து உட்கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

இதனிடையே, உடலில் கொழுப்புச் சத்து சீராக இருப்பதற்கு உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிக்கின்றது.

ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் மக்களிடையே உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது கொழுப்புச் சத்தை தடுக்க பயனாக இருக்கும் என்றார் டாக்டர் வினோத் ராஜ்.

தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற ஆய்வின் படி, 2023-ஆம் ஆண்டு மலேசியாவில் 33.3 விழுக்காட்டினர் கொழுப்புச் சத்து நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கு மக்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

எந்த உணவாக இருந்தாலும், அதனை அளவோடு உட்கொண்டால், அதுவே உடலை சீராக வைத்திருக்கும் என்பதை பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் வினோத் ராஜ் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502