பொது

மெய்சிலிர்க்க வைக்கும் கந்தப்பனின் தேசப் பற்று 

14/08/2024 08:35 PM

ஜோகூர்பாரு, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டின் மீது கொண்ட அளப்பறிய பற்றின் காரணமாக, தேசியக் கொடியை வாங்குவதை ஒரு செலவாகக் கருதாத ஒருவர்...

கடந்த 24 ஆண்டுகளாக ஆயிரக் கணக்கான JALUR GEMILANG தேசியக் கொடியை கொண்டு தமது வீட்டை தவறாது அலங்கரித்து, தேசிய உணர்வை மெய்பித்து வரும் எம். கந்தப்பனின் தேசியப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது.

64 வயதான அவர், ஜோகூர் மாநிலத்திற்குப் புதியவர் அல்ல.

ஏனெனில், ஆண்டுதோறும் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது ஜொகூர், பண்டார் ஶ்ரீ ஆலாமில் உள்ள தமது இல்லத்தை தேசியக் கொடிகளால் அலங்கரித்து பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்.

கந்தப்பனின் வீடு மட்டுமின்றி, அவரின் காரும், தேசியக் கொடி, ஜோகூர் மாநிலக் கொடி உட்பட அனைத்து மாநிலங்களின் கொடி மற்றும் தேசியத் தலைவர்களின் முகங்களும் இன்னும் பல்வேறு சுதந்திரம் சார்ந்த வில்லைகளும் ஒட்டப்பட்டு பலரையும் கவர்ந்துள்ளது.

தமது அச்செயல் பிரபலமடைவதற்காக அல்ல. மாறாக வாழும் காலம் முழுவதும், நாட்டின் மீதான விசுவாசத்தினையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துவதே தமது இலட்சியம் என்கிறார் கந்தப்பன்.

''நாட்டின் மீது எப்போதும் எனக்கு அளவுக்கதிகமான பற்றுதல் உள்ளது. அதனால் தான் ஆண்டுதோறும் சளைக்காமல் இவ்வாறு செய்து வருகிறேன். நீங்களும் உங்கள் வீட்டில் குறைந்தது ஒரேயொரு தேசியக் கொடியையாவது பறக்கவிட்டு தேசிய உணர்வை வெளிப்படுத்துங்கள்,'' என்று அவர் மலேசியர்களுக்கு ஆலோசனைக் கூறினார்.

இவ்வாண்டு சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான பல்வேறு அளவிலான தேசியக் கொடிகளை தமது இல்லத்தில் பொருத்தி இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரின் வில்லைகளைக் கொண்டு தமது PROTON X70 மற்றும் PROTON EXORA ரக கார்களையும் அலங்கரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னதாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆண்டுதோறும் தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற கந்தப்பனின் குறையாத நாட்டுப் பற்று போற்றுதலுக்குரியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)