பொது

இணையப் பாதுகாப்பு விவகாரங்களை களைய, MCMC மேற்கொண்ட இணைய ஒழுங்குமுறை கட்டமைப்பு, ஓர் ஆக்கபூர்வ நடவடிக்கை

14/08/2024 08:02 PM

கோலாலம்பூர், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், MCMC மூலமாக இணையம் தொடர்பான புதிய இணைய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியிருக்கும் அரசாங்கத்தின் முயற்சி, சமூக ஊடகப் பயனர்கள் குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆக்கபூர்வ நடவடிக்கையாகும்.

இத்தகைய கட்டுப்பாட்டுகள் இல்லாத காரணத்தால், இயங்கலையில் குறிப்பாக சமூக ஊடகங்களில் மலேசியர்கள் அதிக நேரம் செலவிடுவதால், தவறான நடவடிக்கைகளும் அதிகரிப்பதாக மலேசிய சைபர் பயனீட்டாளர் சங்கம் MMCA-வின் தலைவர் சிராஜ் ஜாலில் தெரிவித்தார். 

''இணையத்தில் வலம் வருவது போன்ற ஏதாவது ஒன்றில் நாம் அதிக நேரம் செலவிடும் வேளையில், அங்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாவிடில், அத்தளங்கள் மூலமாக தவறான நடவடிக்கைகள் அதிகளவில் ஏற்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.''

''...அதிலும் குறிப்பாக நிதி சம்பந்தப்பட்டது. அத்தளத்தின் பயனர்களை தங்களின் வலையில் சிக்க வைக்க, இணைய குற்றவாளிகளிகளை ஈர்க்கிறது,'' என்றும்  பெர்னாமா தொடர்புக் கொண்டபோது அவர் கூறினார்.

இருந்த போதிலும், கல்வி அமைச்சு மற்றும் மத அமைப்புகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதுடன், சிறார், பெற்றோர் ஆகியோருக்கிடையே ஊடக மற்றும் இலக்கவியல் கல்வியறிவை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கருத்தில் கொள்வதன் மூலம், ஒழுங்குமுறை கட்டமைப்பு விரிவானதாக இருக்க வேண்டும் என்று சிராஜ் பரிந்துரைத்தார்.

''மேலும், இந்த கட்டமைப்பில் சைபர் குற்றத்தின் சிக்கலைக் கட்டுப்படுத்தும் பிரச்சனையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்விவகாரம் போலீசின் பொறுப்பில் இருப்பது தெளிவாகப் புரிகிறது. எனவே, முடிந்தால் அரச மலேசிய போலீஸ் படையின் கீழ் சைபர் குற்றவியல் விசாரணைத் துறையை அமைக்கும் முயற்சிக்கும் இக்கட்டமைப்பு வழிவகுக்கிறது.''

''அதேவேளையில், சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அம்பலப்படுத்தப்பட்டாலோ அல்லது அதில் சிக்கியிருந்தாலோ,  அவர்களுக்கு உதவும் ஒரு நடவடிக்கையாகவும் இது இருக்கும்.''

''ஏனென்றால்,  ஒருவர் சைபர் குற்றத்திலோ, மோசடி அல்லது பகடிவதைக்கோ ஆளானால், அவர்களுக்குத் தீர்வாக எவ்வித வழியும் இல்லை,'' என்றும் சிராஜ்  குறிப்பிட்டார்.

இதனிடையே, ஊடகம் மற்றும் இலக்கவியல் கல்வியின் முக்கியத்துவத்தை பள்ளியைச் சேர்ந்த பெற்றோருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் புகுத்துமாறு மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சமூக ஊடக ஆய்வாளரான பேராசிரியர் டாக்டர் சரஸ்வதி சின்னசாமியும் வலியுறுத்திக் கூறினார். 

ஏனெனில், பிள்ளைகளிடையே இலக்கவியல் கல்வியறிவை வளர்ப்பதில் பெற்றோரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இதில் தகவல்களைப் பகிர்வதற்கு முன் இரு தரப்பினருக்கு இடையிலான ஒப்புதல், தனியுரிமை மற்றும் இணையத்தில் எது சரி, எது தவறு என்பதற்கான வேறுபாட்டை புரிந்துகொள்வது போன்ற முக்கிய அம்சக் கூறுகளும் இடம்பெற்றுள்ளன.

அதேவேளையில், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தை எவ்வாறு சிறப்பாகவும் நெறிமுறையாகவும் பயன்படுத்துவது என்பதை மாணவர்களுக்கு கற்பிப்பதில் பள்ளிகள் முதன்மைப் பங்கு வகிக்கும் என்பதால், இலக்கவியல் கல்வியறிவு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

பெற்றோர் குறைந்தபட்சம் திறன்பேசியைப் பயன்படுத்தும் திறன் போன்ற அடிப்படை இலக்கவியல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

உண்மையில், சிறுவயதிலிருந்தே இலக்கவியல் கல்வியைப் பற்றி சிறுவர்களுக்குக் கற்பிப்பதன் முக்கியத்துவம், பள்ளியில் மட்டுமல்ல, வீட்டிலும் தொடங்க வேண்டும் என்றும் அவர் கோடிகாட்டினார்.

பிள்ளைகளுடன் நேர்மறையான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பெற்றோருக்கு உணர்த்த வேண்டும்.

புதிய தளத்தைப் பற்றிய குழந்தைகளின் உற்சாகத்தை நிராகரிப்பதற்குப் பதிலாக, பெற்றோர்களும் சேர்ந்து அதற்கான செயல்பாட்டை ஆராயலாம்.

இவ்வகையான அணுகுமுறை பிள்ளைகளிடையே,  மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க முடியும் என்பதோடு, குடும்ப உறுப்பினர்களிடையே திறந்த தொடர்பையும் வளர்க்கின்றது. 

அதிலும் குறிப்பாக, பிள்ளைகளுக்கு முன்னால் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைத்து கொள்ள பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு, தேவையற்ற சிக்கல்கள் அல்லது விஷயங்கள் நடப்பதைத் தடுப்பதற்கான முதல் படியாகும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புலத்தின் செயற்கை நுண்ணறிவுத் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டாக்டர் அஸ்னுல் காலிட் முஹமட் சப்ரி கூறினார்.

கட்டமைப்பின் அடிப்படையில், சமூக ஊடகத் தளங்கள், இணைய செய்தி வெளியிடல் சேவை தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்ய முடியும்.

அவை இணைய அச்சுறுத்தல், இணைய குற்றங்கள் மற்றும் மேலும் பலவற்றைக் கட்டுப்படுத்த உதவும்.

இருப்பினும், சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய செய்தி சேவை மூலம் ஒழுங்குமுறை கட்டமைப்பு உண்மையாக கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய, MCMC பொதுவில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அவற்றுடன், மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு முறை குறித்தும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் என்று அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, நாட்டில் குறைந்தபட்சம் எண்பது லட்சம் பயனர்களைக் கொண்ட, அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையச் செய்தியிடல் தளங்களும், 1998-ஆம் ஆண்டு தகவல் மற்றும் பல்லூடக சட்டம் செக்‌ஷன் 588இன் கீழ், ASP (C) உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி இது நடைமுறைப்படுத்தப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)