பொது

ஸ்கூடாய் யூ.தி.எம் சதுக்கத்தில் தென் வட்டாரத்திற்கான மக்கள் மடானி திட்டம்

14/08/2024 07:09 PM

ஜோகூர் பாரு, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) --  தென் வட்டாரத்திற்கான மக்கள் மடானி திட்டம், நாளை தொடங்கி வரும் சனிக்கிழமை வரையில், ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சதுக்கத்தில் நடைபெறவிருக்கிறது.

இம்முறை நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, வருகையாளர்களுக்கு வேறுபட்ட ஓர் அனுபவத்தை அளிக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிறைவு விழாவில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யவிருக்கும் ஓராண்டுக்கான மடானி பொருளாதார அறிக்கை மற்றும் பொறுப்பாணையில் கவனம் செலுத்தப்படும்.

கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து மடானி பொருளாதார அடைவுநிலை குறித்த கலந்தாலோசிப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

பிரதமருடன், பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி, ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி உட்பட மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுப் யூசோவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்நிகழ்சியில் மக்களுக்குத் தேவையான 175 சேவை முகப்புகள் திறக்கப்படவுள்ள வேளையில், அமைச்சுகள் மற்றும் மாநில அரசாங்க நிறுவனங்களை உட்படுத்தி 34 முகப்புகள் திறக்கப்படவுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502