உலகம்

ஆப்பிரிக்கா நாடுகளில் மோசமடைந்து வரும் குரங்கம்மை

15/08/2024 06:01 PM

காங்கோ, 15 ஆகஸ்ட் (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயக் குடியரசில் குரங்கம்மை சம்பவங்கள் மோசமடைந்து வருவதோடு ஆப்பிரிக்க நாடுகளிலும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், அந்நோய்  அனைத்துலக சுகாதார விதிமுறைகள், IHR-இன் கீழ், அனைத்துலக அக்கறையின் சுகாதார அவசரநிலை, PHEIC-ஐ ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் தெட்ரஸ் அதானோம் கெப்ரியெசுஸ் தெரிவித்தார்.

WHO மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் வழங்கிய தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்காக அதற்கு முந்தைய நாளில் கூடிய IHR நிபுணர்களின் அவசரக் குழுவின் ஆலோசனையின்படி அவர் அப்பிரகடனத்தைச் செய்துள்ளார்.

mpox இன் அதிகரிப்பை ஒரு PHEIC ஆகக் கருதுவதாக அக்குழு DR TEDROS-சிற்கு தெரிவித்துள்ளதோடு, இது ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கும் ஒருவேளை ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியிலுள்ள நாடுகளுக்கும் பரவக்கூடிய சாத்தியம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளதை டாக்டர் தெட்ரஸ் சுட்டிக்காட்டினார்.

''கிழக்கு டிஆர்சி-இல் பிற வகையிலான குரங்கம்மை நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அந்நோய் மிக வேகமாகவும் பரவி வருகிறது. இதற்கு முன்னர் குரங்கம்மை நோய் பரவாத அண்டை நாடுகளிலும் தற்போது அந்நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிற்குள்ளும் வெளியேயும் அந்நோய்ப் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது கவலையளிக்கிறது. மேலும், இந்நோயைக் கட்டுப்படுத்தி உயிரைக் காப்பதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துலக நடவடிக்கை அவசியம் என்பதை ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளில் பிற வகை குரங்கம்மை நோய் பரவியுள்ளது, தெளிவாகக் காட்டுகிறது,'' என்றார் அவர்.

காங்கோ ஜனநாயக் குடியரசில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நோய்க் குறித்து பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த வேளையில், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மிக மோசமாக அதிகரித்தது.

இவ்வாண்டு அந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகரித்து, இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களும், 524 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் தெட்ரஸ் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)