பொது

3ஆர் விவகாரங்களைப் பேசிய முகிடின் மீது நடவடிக்கை தேவை - பகாங் பட்டத்து இளவரசர்

19/08/2024 05:06 PM

பகாங், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நடந்து முடிந்த நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது 3ஆர் எனப்படும், இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்களை வேண்டுமென்றே பேசிய முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முகிடின் யாசினுக்கு எதிராக போலீசார் சமரசம் ஏதும் காணாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பகாங் மாநில பட்டத்து இளவரசர் தெங்கு ஹஸ்சனல் இப்ராஹிம் அலாம் ஷா வலியுறுத்தினார்.

பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா, மாமன்னராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில் அவரின் கடமையையும் பொறுப்பையும் அலட்சியப்படுத்தும் விதமாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகிடினின் கூற்று அமைந்திருப்பது வருத்தம் அளிப்பதாக தெங்கு ஹஸ்சனல் தெரிவித்தார்.

நாட்டின் பத்தாவது பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அல்-சுல்தான் அப்துல்லா நியாயமான முறையில், நடந்துகொள்ளாததாக முகிடின் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் சாடினார்.

அந்த மூத்த அரசியல்வாதியின் இக்கூற்று மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெங்கு ஹஸ்சனல் கவலை தெரிவித்தார்.

தாம் பிரதமராக நியமிக்கப்படாமல் போனதை ஏற்றுக்கொள்ள முடியாத முகிடின் இதுபோன்ற முதிர்ச்சியற்ற கருத்துகளை வெளியிட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இடைத்தேர்தலில் பிரச்சாரத்தின் போது 3ஆர் தொடர்பிலான விவகாரங்கள் குறித்து பேசி இருக்கும் முகிடின், அது குறித்த போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் நம்புகிறார்.

இன்று கெடா சுல்தான் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்சாம் ஷா போலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மாத தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது செய்தியாளர்கள் சந்திப்பில் சைஃபுடின் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)