பொது

சாலை விபத்துகளில் பாதிப்பு: சட்ட ரீதியிலான தெளிவு அவசியம்

19/08/2024 04:59 PM

கோலாலம்பூர், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) --  ஆண்டிற்கு சராசரியாக 11 லட்சத்து 90 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது.

அதன் அடிப்படையில், மலேசியாவில் மட்டும் கடந்தாண்டு வரை சுமார் 5 லட்சத்து 98 ஆயிரத்து 635 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் அதேவேளையில், சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் பெரும்பான்மையான மக்கள், அதன் தொடர் நடவடிக்கையான சட்ட குறித்த தெளிவைப் பெற்றிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியே

அதற்கான, தெளிவையும் வழிமுறைகளையும் மக்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதை இன்றைய வாராந்திர சட்டம் தெளிவோம் அங்கத்தில் விளக்குகிறார் வழக்கறிஞர் ராஜேஸ்வரி பரமசிவம்.

மனித வாழ்வில் பயணமானது இன்றியமையாத ஒன்றானதால் பரபரப்பான சூழலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தேவைகளுக்காக நாம் பயணத்தை மேற்கொள்கிறோம்.

அவ்வாறு மேற்கொள்ளும் பயணங்களானது கவன குறைவு மற்றும் அவசரத்தின் காரணமாக சில நேரங்களில் விபத்துகளை ஏற்படுத்துகின்றது.

அதில், சாலை விபத்தின்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பல இருந்தாலும் குறித்த நேரத்தில் போலீசிடம் வழங்கப்படும் புகார் மிகவும் அவசியம் என்கிறார் வழக்கறிஞர் ராஜேஸ்வரி.

''எனவே, நீங்கள் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் அது மேல் விசாரணைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதுவே நீங்கள் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கழித்து புகார் வழங்கினால் சம்ப இடத்தில் விபத்து நடந்ததற்கான தடயங்கள் இருக்காது. அதோடு, உடனடியாக புகார் வழங்குவதன் மூலம் சம்பவ இடத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக சந்தித்து விசாரணை நடத்த முடியும்'', என்று அவர் கூறினார்.

சாலை விபத்தின்போது சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் அவ்விபத்து குறித்த சட்ட நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது போன்ற குழப்பங்கள் இன்னமும் மக்கள் மத்தியில் நிலவி வருவதாக கூறிய அவர், அது குறித்த விளக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.

''சில நேரங்களில் சில குழப்பங்கள் வரலாம். சாலை விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டால் யார் புகாரளிப்பது. ஆக, இதுபோன்ற சூழ்நிலையில் மரணமடைந்தவர்களின் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் அல்லது சம்பவத்தின் போது உடன் இருந்து பார்த்தவர்கள் புகாரளிக்கலாம்'', என்று அவர் தெரிவித்தார்.

மேலும், விபத்துகள் ஏற்பட்ட பிறகு மருத்துவ பரிசோதனை செய்வதுடன் அதன் அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்பிப்பது சட்ட நடவடிக்கைகளில் ஒன்று எனவும் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

இதனிடையே, சாலை விபத்துகளின் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான கால அவகாசம் குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

''ஒரு சராசரி சாலை விபத்து என்றால் விபத்து நிகழ்ந்த நாள் தொடங்கி ஆறு வருடத்திற்குள் வழக்கு தொடுத்து விட வேண்டும். இதுவே மரணமடைந்திருந்தால் விபத்து நிகழ்ந்த நாள் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கு தொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயம். ஆனால், பெரும்பான்மையானோர் அதை தெரிந்து கொள்ள தவறிவிடுகின்றனர்'', என்று அவர் விளக்கினார்.

சாலைகளில் பயணங்களை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் உயிரின் பெரு மதிப்பை உணர்ந்து செயல்படும் அதேவேளையில், விபத்துகள் தொடர்பில் சட்ட ரீதியான விதிமுறைகளை அறிந்திருப்பதும் அவசியம் என்று ராஜேஸ்வரி பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)