பொது

இந்தியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக 'நம்மை நாம் காப்போம்' எனும் வலைத்தளம் அறிமுகம் கண்டது

19/08/2024 05:13 PM

கிள்ளான், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியர்கள் குறிப்பாக பி40 பிரிவை சேர்ந்தவர்கள் தங்களுக்கான திட்டங்களையும் உதவிகளையும் முறையாக பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டியாக 'நம்மை நாம் காப்போம்' எனும் புதிய வலைத்தளம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டது.

P3M எனப்படும் சமூக மேம்பாட்டு வழிகாட்டி அமைப்பின் முயற்சியில் உருவான www.nnkcare.my இந்த வலைத்தளம் மூலம் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உதவிகளையும் எளிமையான முறையில் பெற முடியும் என்று பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

அதோடு, இந்திய சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பங்கை இந்த வலைத்தளம் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார்.

''ஆலயம், அரசு சார்பற்ற இயக்கங்கள், சமுதாயம் ஆகியவை மூன்றும் இணைந்து செய்யக்கூடிய பணிதான் நம்மை நாம் காப்போம்,'' என்றார் அவர்.

சமுதாயத்தில் சிறந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் மட்டும் தேவைப்படாது.

மாறாக, ஒரு தனிநபரின் சமூகப் பணியும் அவசியம் என்பதற்கு ஏற்ப இந்த வலைத்தளம் செயல்படும் என்கிறார் சண்முகம்.

ஞாயிற்றுக்கிழமை கிள்ளானில் நடைபெற்ற 'நம்மை நாம் காப்போம்' வலைத்தளம் அறிமுக விழாவில் கலந்து கொண்ட போது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502