பொது

நாட்டுப்பற்றை மக்களுக்கு உணர்த்தும் அரசாங்கத்தின் தேசிய கொடியைப் பறக்கவிடும் பிரச்சாரம்

20/08/2024 07:31 PM

கோலாலம்பூர், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) --   நாட்டின் 67-ஆவது சுதந்திர தினத்திற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் மக்கள் நாட்டின் மீதான பற்றை உணர்வதிலும் அதனை அவர்களுக்கு உணர்த்துவதிலும் அரசாங்கம் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ஜாலூர் கெமிலாங்கைப் பறக்கவிடும் பிரச்சாரத்தை அரசாங்கம் மேற்கொண்டு வந்தாலும் மக்களிடையே அதற்கான வரவேற்ப்பு குறைவாகவே காணப்படுகிறது.

மலேசியா சுதந்திரம் அடைந்து சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் சுதந்திர காற்றை சுவாசிக்க வித்திட்டவர்கள் தேசத் தலைவர்களும் போராட்ட வீரர்களுமே.

அவர்களின் அர்ப்பணிப்பையும் தியாக உணர்வையும் போற்றி நன்றி கூறும் விதமாகவே ஜாலூர் கெமிலாங்கைப் பறக்கவிடும் பழக்கத்தை மலேசியர்கள் சிலர் கடைப்பிடித்து வருவதாக கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம்.

''ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் தேசிய கொடியை மரியாதை செலுத்தும் விதமாக தனது வீட்டின் முன்புறமும் காரிலும் அவர்கள் ஏந்தி அணிவகுத்து சென்று ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இந்த தேசிய கொடியும் தேசிய கீதமும் மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாடுகளும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்'', என்று அவர் கூறினார்.

அன்றைய காலங்களில், குறிப்பாக ஐம்பது அறுபதாம் ஆண்டுகளில் தோட்டப்புறங்களில் வசித்தவர்களுக்கு சுதந்திர உணர்வு இயல்பாகவே உயிரில் உரமாகி இருந்தது.

ஆனால், பல பரினாம வளர்ச்சிக்கு பிறகு தோட்டப்புறங்களில் கொண்டாடிய சுதந்திர தினத்திற்கும், இன்று நகர்புறங்களில் கொண்டாடும் சுதந்திர தினத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கூறிய அவர்,

காலம் மாற மாற மக்கள் மத்தியில் சுதந்திர பற்றும் வயதுக்கு ஏற்றவாறு மாறும் என்பதை சுட்டிக்காட்டினார்.

''தோட்டங்களிலே சுதந்திர தினமன்று பல போட்டி விளையாட்டுகள் நடக்கும். அதே வேளையிலே தேசிய கொடி அணி வகுப்புகளும் நடக்கும். ஆனால் இன்று பலர் பிரிந்து பல இடங்களில் வாழக்கூடிய சூழ்நிலையிலே நமது இந்திய சமூதாயம் மீண்டும் ஒற்றுமையுடன் தேசிய தினத்தைக் கொண்டாட வேண்டும்'', என்று அவர் வழியுறுத்தினார்.

சீர், செழிப்பு, செல்வம், வளம், பசுமை நிறைந்த இந்நாட்டில் வாழும் மலேசிய மக்கள், இதன் அமைதியையும் தேசப் பற்று கடப்பாட்டையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுச் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

அதனை கருத்தில் கொண்டே, ஜாலூர் கெமிலாங்கைப் பறக்கவிடுவோம் என்ற பிரச்சாரத்தை அரசாங்கம் தொடர்ந்து வழியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)