BREAKING NEWS | PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | |
செராஸ், 22 டிசம்பர் (பெர்னாமா) - நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார துறையில், இந்திய மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நற்சிந்தனையில் தொடர்ந்து பல உதவிகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது, கியூமிக் எனப்படும் மலாயாப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் நடவடிக்கை குழு.
அந்த வரிசையில், மலாயாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும் இந்திய மாணவர்களின் நிதி சுமையைக் குறைக்கும் முயற்சியாக சி.இ.எப் எனப்படும் கியூமிக் கல்வி நிதி உதவியை நேற்று அக்குழு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
நாடு தழுவிய நிலையில் உள்ள பட்டதாரிகளிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், சிலாங்கூர் செராஸில் உள்ள மங்கி கேனோபி ரிசார்டில் நடத்தப்பட்ட ஒன்றுக்கூடல் நிகழ்ச்சியில் இந்நிதி குறித்து அறிவிக்கப்பட்டது.
பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில் 'அரசாங்கக் கல்விக்கூடங்களே எங்கள் முதல் தேர்வு', ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு' , "ரோட் டூ எஸ்.பி.எம்" பட்டறை போன்ற பல திட்டங்களைக் கியூமிக் முன்னெடுத்து வருகின்றது.
இதுப்போன்ற திட்டங்களைச் செயல்படுத்த உதவிய பட்டதாரிகளின் சேவையை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கியூமிக் கழகத்தின் பொருளாளர் ரவி ரத்தினம் குறிப்பிட்டார்.
''இந்தக் கியூமிக் இயக்கத்தின் முக்கியமான கொள்கையானது, அரசாங்க கல்விக்கூடங்களே எங்கள் முதல் தேர்வு என்ற வழிக்காட்டி திட்டத்தை வெற்றிப் பெற செய்தவர்களைப் பாராட்டும் விதமாகவும், பின் இந்த நாட்டின் சமுதாயத்திற்குப் பெரும் பங்காற்றியவர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட விருந்துடன் கூடிய கலை நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது, '' என்றார் அவர்.
சி.இ.எபைத் தொடங்குவதற்கான முன்னெடுப்பு கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட நிலையில் அது தற்போதுதான் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிதி தொடங்கப்பட்ட 10 நாட்களிலேயே ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 722 ரிங்கிட் வரை, அக்குழுவைச் சேர்ந்த முதன்மை உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான நபர்களிடம் இருந்து மட்டும் திரட்டப்பட்டுள்ளது.
''அதாவது, கியூமிக் கல்வி நிதி உதவி. பட்டதாரிகளிடமிருந்து பட்டதாரிகளுக்காக என்ற அடிப்படையில் புது முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று இங்கு இளம் பட்டதாரிகள், பட்டம் பெற்றவர்கள், அனைவரும் சேர்ந்து ஏறத்தாழ 152 ஆயிரம் ரிங்கிட் கல்வி நிதியை மாணவர்களுக்காக திரட்டியுள்ளனர்,'' என்றார் கியூமிக் கல்வி மத்திய செயலவை உறுப்பினர் யுகேஸ்வரி சுப்பையா.
இதனிடையே, படித்து முடித்த பட்டதாரிகள், இனிவரும் மாணவர்களுக்கு முன்னோடியாக இருந்து செயலாற்றுவதோடு, அவர்களின் சிறந்த தேர்ச்சிக்கு பங்காற்ற முன்வர வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் பெர்னாமா செய்திகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
''இருபத்து ஐந்து ஆண்டு காலமாக, படிவம் ஆறு வகுப்பினை நடத்தி வருகின்றேன். ஏறத்தாழ நெகிரி செம்பிலான், மலாக்கா, சிலாங்கூர்,கோலாலம்பூர், பகாங் போன்ற மாநிலங்களிலிருந்து மாணவர்கள் என்னிடம் பயில்கிறார்கள். அதில் 4,000 மாணவர்கள் அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படித்து, இன்று உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர், '' என்றார் நெகிரி செம்பிலான் இந்தியப் பட்டதாரிகள் கழகத் தலைவர் முனைவர் பழனி முத்துசாமி.
''நமக்காக இணைந்தோம்'' என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், நாடு தழுவிய நிலையில், அனைத்து பட்டதாரிகளும் இணைந்து வருங்கால பட்டதாரிகளின் கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)