பொது

அந்நிய நாட்டினரை நாட்டிற்குள் கொண்டு வரும் கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு

21/08/2024 06:05 PM

புத்ராஜெயா, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அமலாக்கத் தரப்பினரின் சோதனைக்கு உட்படுத்தாமல், அந்நிய நாட்டினரை நாட்டிற்குள் கொண்டு வருவதாக நம்பப்படும் கும்பலின் நடவடிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்பிஆர்எம் முறியடித்துள்ளது.

20-லிருந்து 50 வயதான ஒன்பது ஆடவர்கள், மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டதன் வழியாக அந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

நேற்று, கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு, கிளந்தான் முழுவதிலும் எஸ்பிஆர்எம் மேற்கொண்ட 'Op Pump' நடவடிக்கையின் மூலம் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில், நான்கு நிறுவன உரிமையாள, அந்நிய நாட்டினரின் நுழைவை நிர்வகிப்பவர்கள் என்று நம்பப்படும் மூன்று பொதுமக்கள் மற்றும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணிபுரியும் ஐந்து அமலாக்க அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

அமலாக்க நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளுடன் இணைந்து இக்குழு மேற்கொண்ட இந்நடவடிக்கையை, 2022-ஆம் ஆண்டு முதல் எஸ்பிஆர்எம் நடத்திய உளவு நடவடிக்கையின் மூலம் கண்டறியப்பட்டதாக அசாம் பாக்கி குறிப்பிட்டார்.

இக்குழு லட்சக்கணக்கான ரிங்கிட்டில் லாபத்தை ஈட்டியதாக நம்பப்படுவதோடு 2022 லிருந்து 2024-ஆம் ஆண்டு வரை 40 லட்சத்திற்கும் ரிங்கிட்டிற்கும் மேல் பணத்தைப் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)