பொது

வர்த்தகர்களுக்குச் சாதமாக அமையும் மலேசியா-இந்தியா இருவழி வர்த்தக ஒப்பந்தம்

22/08/2024 06:21 PM

கோலாலம்பூர், 22 ஆகஸ்ட் (பெர்னாமா) --  நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் அண்மையில் நடந்த மலேசியா மற்றும் இந்தியா இடையிலான இருவழி வர்த்தக ஒப்பந்தமானது வர்த்தகர்களுக்குச் சாதமாக அமைகின்றது.

ஆசியானில் நீண்ட காலமாக, அதாவது 15 ஆண்டுகளாக உறுப்பியம் கொண்டுள்ள இந்தியா, முதலீட்டை அதிகரிப்பது உட்பட இருவழி உறவை மேம்படுத்தி வருவதாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.

இருவழி வர்த்தகங்களும் புதிய வியூக அடிப்படையில் பல செயல்பாடுகளை வரையறுத்து வருவதால் தற்போது இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட்டைப் பயன்படுத்தி மேற்கொண்டு வரும் பரிவர்த்தனைகள் வளர்ச்சி பாதைக்கு வித்திடுவதாக நிவாஸ் ராகவன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏற்றுமதி இறக்குமதிக்கு இன்று அமெரிக்க டாலர் பயன்படுத்தாமல் இந்திய ரூப்பிஸ் மற்றும் மலேசிய ரிங்கிட் மூலம் சரி செய்யலாம் என்று ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடிய ஒரு நல்ல விஷயம். இன்றைக்கு நம்முடைய ரிங்கிட் அமெரிக்க டாலரில் மேம்படுத்தி இருக்கிறது'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்திய சந்திப்பின் போது சுமார் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

ஏற்கனவே, இரு நாடுகளுக்கு இடையிலான சுமார் 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பரிவர்த்தனைகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் இரட்டிப்பாகலாம் என்றும் அவர் எதிர்பார்க்கின்றார்.

''மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் வர்த்தக ரீதியில் 20 பில்லியன் அமெரிக்க டாலர். எனவே, இருக்கின்ற ஒப்பந்தங்களின் மூலம் இன்னும் மேம்படுத்தி இரண்டு நாடுகளும் சேர்ந்து 20 பில்லியன் அமெரிக்க டாலரை 30 அல்லது 35 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுத்துள்ளது'', என்று அவர் கூறினார்.

இத்திட்டங்கள் கட்டம் கட்டமாக வெற்றியடைவதற்கு இரு நாட்டு வர்த்தகர்களும் அந்தந்த நாடுகளின் பங்குச் சந்தைக்கேற்ப தங்களின் வணிக வாய்ப்பினைப் பரிமாறிக் கொள்வதும் சிறந்த அடைவைத் தரும் என்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது நிவாஸ் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)