BREAKING NEWS | PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | |
கோலாலம்பூர் , 22 டிசம்பர் (பெர்னாமா) -- 2025/2026ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணையில் நுழையும் ஆறாம் படிவ மாணவர்களுக்கான B-A-P எனப்படும் பள்ளி தொடக்கக் கட்ட உதவித் தொகையை கல்வி அமைச்சு விரிவுப்படுத்துகிறது.
சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்தி ஒரு லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் இதில் பயனடைவார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்குத் தேவையான தயார்நிலை பணிகளை மேற்கொள்வதில், இந்த உதவித் தொகை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும்.
அதோடு, ஆறாம் படிவ கல்வியை வலுப்படுத்துவதற்கும் மாணவர்கள் அக்கல்வியைத் தொடருவதற்கு ஊக்குவிக்கவும் அமைச்சு தொடர்ந்து உறுதியாக உள்ளதை, இம்முயற்சி காட்டுவதாக ஃபட்லினா சிடேக் கூறினார்.
“இது ஒரு நல்ல வாய்ப்பு. வரலாற்றில் முதல்முறையாக ஆறாம் படிவத்திற்கு தொடக்கக் கட்ட உதவி வழங்கப்படுகிறது. ஆறாம் படிவம் பயிலும் அனைத்து மாணவர்களும் தொடர்ந்து ஆர்வத்துடன் கல்வி பயில வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தக் கல்வி அனைத்து இனங்களுக்குமானதாக இருப்பது உறுதிசெய்யப்படும்,“ என்றார் அவர்.
தற்போது ஆறாம் படிவம் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் BAP உதவித் தொகை வழங்கப்படும்.
புதிதாக ஆறாம் படிவத்திற்குள் நுழையும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 150 ரிங்கிட் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்த BAP உதவித் தொகையைப் பெறுவர்.
தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திவெட்டையும் ஆறாம் படிவக் கல்வியையும் விரிவுப்படுத்து உட்பட தமது நிர்வகிப்பின் கீழ் உள்ள அனைத்து வகையான பள்ளிகளையும் உள்ளடக்கி, ஒவ்வொரு நிலையிலும் கல்வி சார்ந்து அணுகுமுறைகளை அதிகரிக்க கல்வி அமைச்சு எப்போதும் உறுதிக் கொண்டுள்ளதாக ஃபட்லினா குறிப்பிட்டார்.
இன்று, கோலா லாங்காட்டில் உள்ள தும்போக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவையும் அப்பள்ளியின் மேம்படுத்தப்பட்ட மண்டபத்தின் திறப்பு விழாவையும் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், தும்போக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுவதில் பெருமைக் கொள்வதாக அதன் தலைமையாசிரியர் கஸ்தூரி ராமச்சந்திரன் கூறினார்..
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்லதொரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் கல்வி அமைச்சின் முயற்சியைப் பெரிதும் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அரசாங்கம் பள்ளிக்கு நிறைய உதவிகளும் வசதிகளும் ஏற்பாடு செய்தி கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, அந்த வசதிகளைப் பயன்படுத்தி பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக சிறப்பான நிர்வாகத்தை நடத்தி பள்ளி மாணவர்கள் மேலும் சிறப்படையும் பெருமையடையவும் செய்வோம் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளோம்,“ என்றார் கஸ்தூரி.
மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதிலும், ஒவ்வொரு பலனும் இன பாகுபாடின்றி அனைத்து வகையான பள்ளிகளை சென்றடைவதை உறுதிசெய்வதிலும், கல்வி அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கஸ்தூரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)