BREAKING NEWS | PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | |
கோலாலம்பூர் , 22 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த ஐந்தாண்டுகளில் 6,000க்கும் அதிகமான மருத்துவர்கள் பதவி விலகியிருப்பதை சுகாதார அமைச்சு இலகுவாக கருதவில்லை.
அந்த எண்ணிக்கையில், ஒப்பந்த முறையில் பணியாற்றிய MO எனப்படும் மருத்துவ அதிகாரிகளில் 3200 பேர், நிரந்த பணியில் இணைவதற்கு பதவி விலகியிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
மேலும், உயர்க் கல்வி பயிலும் காரணத்திற்காகவும் பல மருத்துவர்கள் பதவி விலகியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமது அமைச்சு ஊழியர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்வதை டாக்டர் சுல்கிப்ளி ஒப்புக்கொண்டார்.
இதனால், சில அதிகாரிகள், சக ஊழியர்களை விட அதிக பணிச்சுமையை எதிர்கொண்டுள்ளதாக தமது முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.
மருத்துவர்கள் பதவி விலகி வருவது தொடர்பாக அமைச்சு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ரஃபிடா அப்துல்லா செய்த பதிவிற்கு, டாக்டர் சுல்கிப்ளி அவ்வாறு பதிலளித்தார்.
சுகாதாரத் துறை உட்பட அனைத்து துறைகளில் பணியாட்களின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் துறைக்கு இடம்பெயர்வதை சுகாதார அமைச்சினால் தடுக்க முடியவில்லை என்றாலும் அவர்களை பொது சேவை துறையில் நிலைத்திருக்கச் செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டாக்டர் சுல்கிப்ளி விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)