BREAKING NEWS   PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | 
 பொது

இசை நிகழ்ச்சியைக் காணச் சென்ற மலேசியர்களை மிரட்டிய இந்தோனேசிய போலீசார் கைது

22/12/2024 05:48 PM

ஜகார்த்தா, 22 டிசம்பர் (பெர்னாமா) - இந்தோனேசியா, வட ஜகார்த்தா, கெமாயோரானில் நடைபெற்ற ஜகார்த்தா கிடங்கு திட்டத்தின் இசை நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்த மலேசியர்களை மிரட்டியதாக சந்தேகிக்கப்படும் அந்நாட்டின் போலீஸ் உறுப்பினர்கள் 18 பேரை இந்தோனேசிய போலீஸ் கைது செய்துள்ளது.

அவர்கள் அனைவரும் மெட்ரோ ஜெயா மாவட்டம்,மெட்ரோ ஜகார்த்தா மையம், கெமாயோரான் போலீஸ் நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என்று பொது தகவல் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ட்ருனொயுடோ விஸ்னு அண்டிக்கோ உறுதிப்படுத்தினார்.

''தேசிய போலீஸ் துறை கைது செய்துள்ள பண்யாளர்கள் மேல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். எனினும், சட்டத்தையும் பொது பாதுகாப்பையும் வலுப்படுத்துவதில் தங்களின் உறுதியைப் பிரதிபலிக்கும் வகையில், தேசிய போலீஸ் துறையின் எந்தவோர் உறுப்பினரும் செய்யும் அத்துமீறல்களை தேசிய போலீஸ் துறை பொறுத்துக்கொள்ளாது,'' என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட மலேசியர்கள் அளித்த சில புகார்களின் அடிப்படையில் அந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சி முழுவதும் அவர்கள் துன்புறுத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

அந்த போலீஸ் உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அம்மலேசியர்கள் சிறுநீர் பரிசோதனையை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதோடு தங்களின் கடப்பிதழைக் காண்பிக்குமாறும் கேட்டக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிறுநீர் பரிசோதனையின் முடிவில் அவர்கள் எவ்வித போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்பது தெரிய வந்தும், அந்த போலீஸ் உறுப்பினர்கள் ஒரு தொகையைச் செலுத்துமாறு வற்புறுத்தியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)