பொது

மஸ்ஜிட் இந்தியாவில் புதைகுழியில் விழுந்த இந்திய நாட்டுப் பெண்

23/08/2024 06:13 PM

கோலாலம்பூர், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று காலை கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா, மலாயன் மென்ஷன் முன்புறத்தில் ஏற்பட்ட புதைகுழியில் 48 வயதான இந்தியப் பிரஜையான பெண் ஒருவர் விழுந்து சிக்கிக் கொண்டார்.

அப்பகுதியில் இருந்த கான்கிரீட் நாற்காலி ஒன்றும் அந்த புதைகுழியில் விழுந்து அப்பெண்ணுடன் புதையுண்டதாக நம்பப்படுகிறது.

கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, JBPM பளுதூக்கி மற்றும் மண்வாரி இயந்திரங்கள் மூலம் அப்பெண்ணைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து இன்று காலை 8.22 மணியளவில் நடவடிக்கை மையத்திற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக ஓர் அறிக்கை வாயிலாக JBPM கூறியது.

அதைத் தொடர்ந்து, திதிவங்சா மற்றும் ஹங் துவா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 15 படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயணைப்பு வீரரும், மாநகராண்மைக் கழக பணியாளரும் எட்டு மீட்டர் ஆழம் கொண்ட அக்குழியில் இறங்கியதோடு, பளுதூக்கியின் துணையோடும் அப்பெண்ணைத் தேடினர்.

ஆனால், எந்தவித தடயமும் கிடைக்காததால், அப்பெண்ணை தேடும் பகுதியை விரிவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் JBPM துணை இயக்குனர் ரொசிஹான் அன்வார் மாமாட் தெரிவித்தார்.

இதனிடையே, அப்பகுதியை சுற்றியுள்ள பாதுகாப்பு குறித்து பேசிய டங் வாஙி மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான், சம்பவம் நிகழ்ந்த இடத்தை முற்றிலுமாக மூடுவதா அல்லது தேவையில்லையா என்பதை முடிவு செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விவாதித்து வருவதாக கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)