பொது

தமிழ்க் கல்விக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில் தமிழாசிரியர் பன்னாட்டு மாநாடு

22/12/2024 07:02 PM

ஜார்ஜ்டவுன், 22 டிசம்பர் (பெர்னாமா) -- பல்வேறு கற்றல் திறனுடன் தமிழ்க் கல்விக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில், 2024ஆம் ஆண்டிற்கான பினாங்கு மாநில தமிழாசிரியர் பன்னாட்டு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

தமிழ்க் கல்வியின் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்துவதில் ஆசிரியர்களின் வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சிக்கு இம்மாநாடு முக்கிய தளமாக அமைந்துள்ளது.

பினாங்கில் முதல் முறையாக நடைபெற்ற இந்த மாநாட்டில் அம்மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி, தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் தேசியப்பள்ளியைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் கலந்து கொண்டதாக மாநில தமிழ்மொழி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் முனைவர் பொன்னுதுரைராஜ் மாரிமுத்து தெரிவித்தார்.

அதோடு, இம்மாநாட்டின் போது 56 ஆசிரியர்கள் தங்ளின் ஆய்வுகளின் முடிவுகளைத் தாக்கல் செய்த வேளையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய 28 குழுக்கள் புத்தாக்கப் போட்டியில் பங்கெடுத்ததாக அவர் கூறினார்.

''500 ஆசிரியர்கள் நேற்று மற்றும் இன்று மட்டுமின்றி இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகள், தேவையான உதவிகளைச் செய்து அவர்களை எவ்வாறு ஒரு புத்தாக்கம் செய்வது, எவ்வாறு செயலாய்வு செய்வது என்பதை ஆராய்ந்து அதன் பிறகு அதனை இந்த மாநாட்டில் அவர்கள் படைத்திருக்கின்றனர்,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, அவர்களின் படைப்புகளை பாராட்டும் விதமாக பரிசுகளும் வழங்கப்பட்டதாக முனைவர் பொன்னுதுரைராஜ் தெரிவித்தார்.

மேலும், சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் சிலர் தங்களின் அனுபவங்களை பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

''இந்த பன்னாட்டு மாநாட்டின் நோக்கம் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை அடிப்படையிலான செயலாய்வுகளையும் மற்றும் தங்களது மாணவர்களுக்கான புத்தாக்க படைப்புகளையும் செய்து, பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் நோக்கமாக கொண்டிருக்கின்றோம்,'' என்று ஜூரூ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் ராஜராஜன் அன்பழகன் கூறினார்.

''இந்த மாநாடு ஒரு சிறந்த மாநாடாக இருந்து வருகின்றது. இரு நாட்கள் சிறந்த வகையில் சென்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாநாடு வருகின்ற காலக்கட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது அவா,'' என்று பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை  எஸ். கோகிலவாணி தெரிவித்தார்,

இம்மாநாடு டிசம்பர் 21ஆம் தேதி தொடர்ங்கி 22ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவை பினாங்கு முதலமைச்சர் சோவ் கொன் இயோவ்  நிறைவு செய்து வைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)