கோலாலம்பூர், 22 டிசம்பர் (பெர்னாமா) -- காணாமல் போன எம்எச்370 விமானத்தைத் தேடும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான மலேசிய அரசாங்கத்தின் அறிவிப்பை அவ்விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பிரதிநிதிக்கும் VOICE 370 சங்கம் வரவேற்றுள்ளது.
NO FIND, NO FEE அதாவது கண்டுபிடிக்கப்படாவிட்டால், கட்டணம் இல்லை என்ற அடிப்படையில் தனியார் கடலடி தேடல் நிறுவனமான, Ocean Infinity-இன் ஒத்துழைப்புடன் இந்தத் தேடல் பணிகள் மீண்டும் தொடரப்படவுள்ளன.
எம்எச்370 காணாமல் போனதற்கான காரணத்தைக் கண்டறிவதோடு, அவ்விமானத்தையும் அதில் இருந்த பயணிகளையும் தேடுவதற்கான மலேசிய அரசாங்கம், போக்குவரத்து அமைச்சு மற்றும் அதன் அமைச்சர் அந்தோணி லோக் ஆகியோரின் உறுதிப்பாட்டிற்கு VOICE 370 நன்றி தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் அவ்விமானத்தை தேடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்தே, தேடல் நடவடிக்கையை விரிவுப்படுத்த Ocean Infinity வலுவான ஆதரவு தெரிவித்து வந்தது.
விடாமுயற்சி, கிடைக்கக்கூடிய அனைத்து தரவையும் பகுப்பாய்வு செய்தது, தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்த மாற்று வழிகள் மற்றும் சாத்தியமான தேடல் பகுதிகள் போன்றவற்றின் அடிப்படையில் அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதை தங்கள் தரப்பு கண்டறிந்ததாக VOICE 370 குறிப்பிட்டுள்ளது.
அதிநவீன கப்பல்கள், மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் உட்பட உயர்தர கடற்படையைப் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கும் அந்நிறுவனத்தின் முயற்சியை தங்கள் தரப்பு பெரிதும் வரவேற்பதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் குடும்பங்கள், அறிவியல் சமூகம் மத்தியிலும் மற்றும் உலகளாவிய விமானப் பாதுகாப்பு தொடர்பிலும் நீண்டகாலமாக பதில் கிடைக்காமல் நீளும் இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர, இந்தத் தேடல் முயற்சி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முயற்சிகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான விமானப் பயணத்திற்கு வழிவகுத்தால், தேடல் நடவடிக்கையும் அதன் வெற்றிகரமான முடிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
MH370 விமானம் காணாமல் போன விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிச்சயமற்ற நிலையில் இருந்து வரும் நிலையில், தேடலை மீண்டும் தொடருவதற்கான விதிமுறைகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு, அப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)