பொது

மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்ட இடத்தில் கடந்தாண்டிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது

23/08/2024 07:54 PM

கோலாலம்பூர், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் விழுந்து இந்திய பிரஜை ஒருவர் சிக்கிக் கொண்ட பகுதியில், கடந்தாண்டும் இதேபோன்றதொரு மண்சரிவு சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவ்விடம் மீண்டு சீர்படுத்தப்பட்டு விட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.

இந்தப் புதைகுழியில் சிக்கிக் கொண்ட 48 வயதுடைய பெண்ணை தேடி மீட்கும் பணிகள் தீவிரமாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தின் நிலத்தடியில் நீரோட்டம் வேகமாக இருப்பதால், சம்பவ இடத்திற்கு கனரக இயந்திரங்களைக் கொண்டு செல்வது போன்ற பணிகளும் இதில் அடங்கும் என்று ருஸ்டி கூறினார்.

அப்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான், சுற்றிப்பார்க்க தமது கணவருடன் மேலும் சில நபர்களுடனும் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

அவர் நாளை, சொந்த நாட்டிற்கு திரும்ப திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், அப்பெண்ணின் கணவரும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் இங்கு மேலும் சில நாட்கள் தங்கியிருக்க அவர்களின் விசாவிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, இச்சம்பவம் தொடர்பில் தங்கள் தரப்பு இந்திய தூதரகத்திடம் தெரிவித்து விட்டதாகவும் ருஸ்டி குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)