பொது

3 வயது மகளுக்கு போதைப்பொருள்; பெற்றோர்கள் மீது குற்றச்சாட்டு

26/08/2024 07:31 PM

கோலாலம்பூர், 25 ஆகஸ்ட் (பெர்னாமா) --  கடந்த வாரம் தமது மூன்று வயது மகளை அலட்சியப்படுத்தி போதைப்பொருள் வழங்கியதாக திருமணமான தம்பதியினர் மீது, இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் கெப்போங், ஜாலான் குவாங் பெர்தாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 26 வயதாக தொழிலதிபர் மற்றும் 21 வயதுடைய அவரின் மனைவி இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2001-ஆம் ஆண்டு குழந்தை சட்டம் பிரிவு 31 உட்பிரிவு 1A மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 34-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். 

நீதிபதி இஸ்ராலிசாம் சனூசி அத்தம்பதியருக்கு தலா ஒரு உத்தரவாதத்துடன் எட்டாயிரம் ரிங்கிட்டிற்கு ஜாமீன் வழங்க அனுமதித்து, மாதத்திற்கு ஒருமுறை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடும்படி உத்தரவிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)