பொது

நடைபாதைகளைப் புவியியல் ரீதியில் ஆய்வு செய்ய வேண்டும் - டத்தோ எம்.அசோஜன்

27/08/2024 05:15 PM

கோலாலம்பூர், 25 ஆகஸ்ட் (பெர்னாமா) --  கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் சில தினங்களுக்கு முன்னதாக நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தைப் போல மீண்டுமொரு சம்பவம் நடக்காமல் இருப்பதை அரசாங்கம், குறிப்பாக கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் உறுதிச் செய்ய வேண்டும்.

மஸ்ஜிட் இந்தியா மட்டுமன்றி கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நடைபாதைகள் அனைத்தும் புவியியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் முன்வர வேண்டும் என்று ம.இ.கா-வின் உதவி தலைவர், டத்தோ எம்.அசோஜன் பரிந்துரைச் செய்துள்ளார்.

48 வயதுடைய விஜயலெட்சுமிக்கு ஏற்பட்ட இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாளை வேரொருவர் இதுபோன்று இதர இடங்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

எனவே, இப்பரிந்துரையானது இத்தகைய சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கும் என்று டத்தோ எம்.அசோஜன் கூறினார்.

"எந்த அளவிற்கு மண் பலவீனமாக உள்ளது. மண்ணின் பலவீனத்தாலும் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம். இது மழைக்காலம் என்பதால் மஸ்ஜிட் இந்திய மட்டுமின்றி கோலாலம்பூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் எந்த நடைபாதையிலும் நீரோட்டம் கொண்ட இடங்களில் இந்த ஆய்வை மிகவும் பரவலாக கோலாலம்பூர் மாநகராண்மை கழகம் மேற்கொள்ள வேண்டும்", என்று அவர் தெரிவித்தார்.

அதோடு, இனி வரும் காலங்களில் ஏதேனும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அப்பணியை மேற்பார்வையிடும் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மிக நேர்த்தியான முறையில் அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முறையான இழப்பீட்டை வழங்குவதும் மிகவும் அவசியம் என்று அசோஜன் கூறினார்.

உள்ளூர் அல்லது வெளியூரைச் சேர்ந்த எவரும் இதில் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, இது பொதுவில் நடந்த ஒரு சம்பவம் என்பதால் அதன் முழு பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

"சமீபத்தில் பிரதமர் கூறியிருந்தார் சம்பந்தப்பட்ட குடும்பம் சுற்றுப்பயணி என்பதால் அவர்கள் தங்குவதற்கான இடம் உட்பட உணவுகளை வழங்க அவர்களுக்கு உதவி செய்வதாக கூறியிருந்தார். அது வரவேற்கக் கூடிய ஒரு விடயம். இருப்பினும், இழப்பீட்டு தொகை என்பது கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் காரணம் இதற்கு சம்பந்தப்பட்ட அந்நபரோ அல்லது குடும்பமோ காரணம் இல்லை", என்று அவர் கூறினார்.

இன்று பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில், இவ்விவகாரங்களைப் பகிர்ந்து கொண்ட அசோஜன், கட்சியின் சார்பில் விஜயலெட்சுமியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)