பொது

IWK நிறுவனத்தின் வசதிகளை ஃபஹ்மி பார்வையிட்டார்

27/08/2024 05:56 PM

ஜாலான் பந்தாய் டாலாம், 25 ஆகஸ்ட் (பெர்னாமா) --  பந்தாய் டாலாமில், கோலாலம்பூரின் தேசிய கழிவுநீர் சுத்திகரிப்பு சேவை நிறுவனத்தின் வசதிகளை லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஹ்மி ஃபட்சில் சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டார்.

அண்மையில், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இந்தியப் பிரஜையைத் தேடி மீட்கும் நடவடிக்கை அப்பகுதியில் நிறைவடையும் என்று தொடர்பு அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அந்நடவடிக்கை தொடர்பில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, அரச மலேசிய போலிஸ் படை, தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், IWK ஆகியவை தமக்கு விளக்கமளித்ததாக ஃபஹ்மி தெரிவித்தார்.

"தேடல் தொடரப்படுகிறது. என்னால் அதுமட்டும்தான் கூற முடியும். ஆனால், நான் அர்ப்பணிப்பைக் காண்கிறேன். தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை அவர்கள் முழுமையாக செய்கின்றனர். அனைத்து கழிவுகளும் இங்குதான் வந்து சேரும். இந்த இடத்தைக் கடந்துதான் போக வேண்டும்", என்று அவர் கூறினார்.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள கழிவுநீர் குழாய் தொடங்கி ஜாலான் பந்தாய் டலாம், கோலாலம்பூர் நடவடிக்கை பிரிவில் உள்ள இறுதி இடம் வரை ஏழு கிலோமீட்டரை உட்படுத்தி தேடல் நடவடிக்கை தொடரப்படுவதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)