பொது

சமூக ஊடக சேவைகளுக்கான உரிமம் தொடர்பில் கருத்து பெறப்படுகிறது

28/08/2024 07:16 PM

கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சமூக ஊடக சேவைகள் மற்றும் இணைய செய்திகளுக்கு அரசாங்கம் உரிமம் வழங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்து எந்தவொரு கருத்தையும் பெறுவதற்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி மூலம் தொடர்பு அமைச்சு தயாராக உள்ளது.

2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி சமூக ஊடக உரிமம் அமலுக்கு வருவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் சந்திப்பு தொடரப்படும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

அனைத்து மலேசியர்கள், குறிப்பாக குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் இணையம் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்ய, சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணைய செய்திகள் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் நிலையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை, சுத்தம் மற்றும் நேர்மையான தேர்தல் கூட்டணி, பெர்சே மற்றும் 'Centre For Independent Journalism',சிஐஜே ஆகியத் தரப்பினரைச் சந்தித்தது குறித்து அவர் இன்று தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் நடந்த இச்சந்திப்பில் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங்கும் எம்சிஎம்சி மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பு வெளிப்படைத்தன்மையோடு நடந்ததாக கூறிய ஃபஹ்மி, பெர்சேவில் இருந்து ஒரு மகஜர் பெறப்பட்டதாகவும் அது ஆராயப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீன மக்களுக்கு நன்கொடை திரட்டுவதாகக் கூறி, சமூக வலைத்தளத்தில் பரவு வரும் தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது மக்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அன்வார் இந்த நினைவுறுத்தலை வழங்கியதாக அவர் கூறினார்.

முன்னதாக இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சின் வாரந்திரச் சந்திப்பில் ஃபஹ்மி உரையாற்றினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)