பொது

நாயை அடித்த பூப்பந்தாட்டக்காரருக்கு 25,000 ரிங்கிட் அபராதம்

30/08/2024 07:55 PM

காஜாங், 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த மாதம் தமது வீட்டு மாடத்தில் நாய் ஒன்றை பலமுறை அடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பூப்பந்து விளையாட்டாளருக்கு காஜாங் செஷன்ஸ் நீதிமன்றம் 25 ஆயிரம்  ரிங்கிட் அபராதம் விதித்தது.

21 வயதான சேமுவல் லீக்கு அத்தண்டனையை விதித்த நீதிபதி மசுலியானா அப்துல் ரஷிட், அத்தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கடந்த ஜூலை முதலாம் தேதி, Landmark Residence-இல் உள்ள தமது வீட்டு மாடத்தில் Husky வகை நாய் ஒன்றை கையால் பலமுறை அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

அந்நபரின் கொடூரச் செயல் அண்டை வீட்டாரால் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

விலங்குகள் மீட்புத் தரப்பினர் அந்நாயை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அது மிகுந்த அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

சட்டம் 772 அல்லது 2015-ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டம் செக்‌ஷன் 29 (1)(a)-இன் கீழ் லீ மீது குற்றம் சாட்டப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)