செலாயாங், 23 டிசம்பர் (பெர்னாமா) -- GISB குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ நசிருடின் முஹமட் அலி, அவரின் துணைவியார் அசுரா முஹமட் யூசோப் மற்றும் திட்டமிட்ட குற்றங்களைச் செய்யும் குழுவின் உறுப்பினர்களான 20 பேர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை, ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வழக்கை மாற்றுவதற்குத் தேசிய சட்ட துறையிடமிருந்து அரசு தரப்பு அனுமதியைப் பெற்று விட்டதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் நோரின்னா பஹாடுன் தெரிவித்ததைத் தொடந்து, செலாயாங் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி லைலாதுல் சுரைடா ஹர்ரோன், இன்று அம்முடிவைச் செய்தார்.
நசிருடின் மற்றும் அசுராவுடன், அல்-அர்காமின் முன்னாள் தோற்றுநர் அஷாரி முஹமட்டின் மகன், முஹமட் அடிப் அத்-தர்மிமியும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அரசு தரப்பின் அவ்விண்ணப்பத்திற்கு எதிர் தரப்பு, வழக்கறிஞர் டத்தோ ரொஸ்லி கமாருடின் மறுக்கவில்லை.
மாறாக, நசிருடின் மற்றும் அசுரா முறையே சுங்கை பூலோ மற்றும் காஜாங் சிறைகளில் வைக்கும்படியும் அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.
எனினும், அவர்கள் இருவருரையும் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்த்து, சாதாரண சிறைகளில் வைக்க போலீஸ் தரப்பு உதவியுடன் உள்துறை அமைச்சுக்குத் தமது தரப்பு விண்ணப்பிக்கும் என்றும் ரொஸ்லி கூறினார்.
இதனிடையே, இவ்வழக்கு பொது விவாதத்திற்கு உட்பட்டது என்பதால் அதன் முன்னேற்றத்திற்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க, உயர்நீதிமன்றத்திடம் பேச்சு தடை உத்தரவுக்குத் தமது தரப்பு விண்ணப்பம் செய்யவிருப்பதாக, மற்றொரு வழக்கறிஞரான நஜிப் சக்காரியா தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)