பொது

67-வது சுதந்திர தின கொண்டாட்டம்; மழையையும் பொருட்படுத்தாது அலையென திரண்ட மக்கள் கூட்டம்

31/08/2024 03:43 PM

புத்ராஜெயா, 31 ஆகஸ்ட் (பெர்னாமா) --   இன்று புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற 67-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு காலை சுமார் 4 மணி தொடங்கியே மக்கள் கூட்டம் அலையென திரளத் தொடங்கியது.

காலை பெய்த மழையையும் பொருட்படுத்தாது மக்கள் ஒரு கையில் குடை மறுக்கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு மெட்டேக்கா என்ற முழக்கத்துடன் ஆரவாரம் செய்து நாட்டின் மீதான தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

காலை சுமார் 7 மணிக்கு அரச அணிவகுப்புகளுடன் தொடங்கிய இக்கொண்டாட்டத்தில், அதைத் தொடர்ந்து இடம்பெற்ற அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு உட்பட பல்லின மக்களின் கவனத்தை ஈர்த்த படைப்புகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

3 மணி நேரங்களுக்கு நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அப்பகுதி முழுவதும் நிறைந்திருந்தனர்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் காண வாய்ப்பு கிடைப்பதால், அதனை ஆண்டுதோறும் தவறவிடுவதில்லை என்று தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கூறினர்.

''என் பிள்ளைகளுக்காக நான் இங்கு வந்தேன். இந்த நாளுக்காக நான் ஒரு மாதமாக வேலை செய்தேன். சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்ற உடைகளை வாங்குவது என அனைத்தையும் தெளிவாக செய்தேன். கடைசியாக நான் நினைத்தப்படி இன்று வந்துவிட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'', என்று கூறினார்  மோகனா தேவி இராஜேந்திரன்.

''இன்று நாம் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றால் எப்படி இந்த சுதந்திரம் நமக்கு கிடைத்தது, அதை மட்டும் என்றுமே மறந்துவிடக் கூடாது. அதனால் என் பிள்ளைகளை நான் ஒவ்வொரு வருடமும் இங்கே அழைத்து வருவேன். இன்று நிறைய பேருக்கு சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்தால் நாம் இன்னும் முன்னே நோக்கி போகலாம்'', என்றார் மணியரசு சோளை. 

அதேவேளையில், நாட்டின் அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் வழிவகுக்கும் பல்லின மக்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இக்கொண்டாட்டம் அமைந்ததாக இதில் கலந்து கொண்ட மலாய் மற்றும் சீனர்கள் சிலர் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தனர்.

''சிறப்பாக உள்ளது. எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில், முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். நிறைய அணிவகுப்புகள் இடம்பெற்றன. அதிலும் குறிப்பாக இராணுவப் படையின் விமான சாகசங்கள்,'' என்று கூறினார் ஃபூ யோங் சீ.

''மலேசிய மக்கள் ஒற்றுமையாக இருப்பதை நான் பார்க்கிறேன். ஏனெனில், அனைவரும் ஒரே இடத்தில் கூடி சுதந்திர தினக் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியோடு ஒன்றாக இணைந்து கொண்டாடுகின்றனர்,'' என்று கைரூல் அயிசாட் பின் முஹமட் கைரூடின் தெரிவித்தார்.

எனவே, JIWA MERDEKA HARI KEBANGSAAN எனும் கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இவ்வாண்டின் சுதந்திர தினம் மக்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் நாளாக மட்டுமின்றி மக்களிடையிலான நல்லிணக்கத்திற்கும் வழிவகுத்துள்ளதை இங்கு காண முடிந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)