பொது

விழாக் கோலம் கண்டது புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்

31/08/2024 06:35 PM

புத்ராஜெயா, 31 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம் இன்று டத்தாரான் புத்ராஜெயாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்வாண்டு கொண்டாட்டம் சில கண்கவர் படைப்புகளுடன் வருகையாளர்களின் கவனத்தைக் கவர்ந்த அதே வேளையில், மேலும் சில சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருந்தது.

தேசிய தின கொண்டாட்டம் 2003ஆம் ஆண்டில் முதல் முறையாகவும் அதைத் தொடர்ந்து 2005, 2018, 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளிலும் புத்ராஜெயாவில் கொண்டாட்டப்பட்டது.

57 குழுக்கள், 22 இசைக்குழுக்கள், 343 தரைமார்க்க வாகனங்கள், 37 வான் சாதனங்கள், 17,262 பங்கேற்பாளர்கள், 112 விலங்குகளுடன் இவ்வாண்டு அணிவகுப்பு கலை கட்டியது.

கேப்டன் முஹமட் ரிசுவான் ரம்சி தலைமையிலான தரைப்படையின் இசை பயிற்சி மைய இசைக்குழு அணிவகுப்பிற்கு தலைமை தாங்கியது.

காலை மணி 8.16க்கு தேசியக் குழுவின் அணிவகுப்புடன் தேசிய தின கொண்டாட்டம் தொடங்கியது.

மலேசியாவின் தேசிய தற்காப்பு பல்கலைக்கழக இராணுவ பயிற்சி கழகத்தின் 100 அதிகாரிகள் ஜாலுர் கெமிலாங்கையும் 333 பங்கேற்பாளர்கள் மாநிலங்களின் கொடிகளையும் ஏந்தி வந்தனர்.

முன்னதாக, அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் உறுப்பினரான, உலு திராம் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த முஹமட் கைருல் அஸ்ஹார் அப்பி பைசா தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ருக்குன் நெகாரா வாசித்தார்.

அதைத் தொடர்ந்து ஏழுமுறை 'மெர்டேக்கா' என்று முழக்கமிட்டது 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஸ்டேடியம் மெர்டேக்காவில் துவாங்கு அப்துல் ரஹ்மாட் புத்ரா அல்-ஹஜ் மெர்டேக்கா முழக்கமிட்ட வரலாற்றுப்பூர்வ நிகழ்வை நினைவுப்படுத்தியது.

இம்முறை தேசிய தின கொண்டாட்டத்தில், பிடிஆர்எம்-இற்கு சொந்தமான புதிய சொத்துக்களில் ஒன்றான 'MVF-5 Dok-ing' கனரக எந்திரன் ஒன்றும் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.

சவால்மிக்க மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் போலீசாரின் பணிகளுக்கு உதவ, இந்த எந்திரன் பயன்படுத்தப்படும் என்று பிடிஆர்எம் தேசிய போலீஸ் படை தலைவரின் செயலகத்தின் தொடர்பு மற்றும் ஊடக கண்காணிப்பு பிரிவின் தலைவர் டிஎஸ்பி முஹமட் ஃபிர்டவுஸ் ரம்லி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)