விளையாட்டு

தேசிய தினத்தில் மலேசிய கலப்பு இரட்டையர்கள் சாதனை

01/09/2024 07:05 PM

சியோல், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- மலேசியாவின் 67-வது தேசிய தினத்தில், 2024 கொரிய பொது பூப்பந்து பட்டத்தைக் கைப்பற்றி, நாட்டிற்கு அர்த்தமுள்ள வெற்றியை பரிசாக வழங்கி இருக்கின்றனர் தேசிய கலப்பு இரட்டையர்களான செங் டாங் ஜீ -தோ ஈ வேய் ஜோடி.

2024-ஆம் ஆண்டில், சூப்பர் 300 தகுதி கொண்ட தாய்லாந்து மாஸ்டர்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து பொது பூப்பந்து போட்டிகளில் இந்த ஜோடி இரண்டாம் இடத்தை வென்றதை அடுத்து, முதன் முறையாக சூப்பர் 500 போட்டியின் வெற்றியாளராக தற்போது உருவெடுத்துள்ளது.

சியோலில் மோக்போ அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், உலகத் தர வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் செங் டாங் ஜீ -தோ ஈ வேய் ஜோடி சீனாவின் குவோ சின் வா - லீ கியான் இணையரைச் சந்தித்தது.

வெற்றியை மலேசிய தனது வசமாக்கினாலும், அதற்காக அது இறுதி நிமிடங்கள் வரை போராட வேண்டியதாயிற்று.

17-21 என்று முதல் செட்டில் தோல்வி கண்ட டாங் ஜீ - ஈ வேய் ஜோடி, பின்னர் 21-13, 21-13 என்று இரு செட்களையும் கைப்பற்றி வெற்றிக் கண்டது.

முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் சீனாவின் செங் சிங் - சாங் சீ இணையரை, 50 நிமிடங்களில் நேரடி செட்களில் வீழ்த்தி, டாங் ஜீ - ஈ வேய் ஜோடி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)