பொது

சத்தியப் பிரமாண ஆதரவு தொடர்பான விசாரணைக்கு தயார்

01/09/2024 05:16 PM

கோலாலம்பூர், 01 செப்டம்பர் (பெர்னாமா) --  ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்குவதற்குச் சத்தியப் பிரமாண ஆதரவு SD-ஐ சமர்பிக்கும்போது, மாட்சிமை தங்கிய மாமன்னரை ஏமாற்றியதற்கான அம்சங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அது தொடர்பான விசாரணைக்கு தாம் தயாராக உள்ளதாக துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதோடு சம்பந்தப்பட்ட தரப்பினரின் மேல் விசாரணைக்கு தயாராக உள்ளதாகவும் தேசிய முன்னணி தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

"இவ்விவகாரம் தொடர்பில், போலீசார் அல்லது சங்கங்களின் பதிவிலாகா அல்லது ஏஜி போன்ற சம்பந்தப்பட்ட தரப்பினர் விசாரணை நடத்தலாம் என்று நான் நம்புகிறேன். இதற்கு காரணம், உறுதிமொழி அல்லது சத்தியப் பிரமாண ஆதரவில் கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரம் தே.மு தலைவருக்கு வழங்குவதற்கான அதிகார ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதோடு வெற்றி பெற்ற தொகுதி தனிப்பட்ட உரிமை அல்ல. மாறாகக் கட்சியின் உரிமை", என்று அவர் கூறினார்.

ஒவ்வொருவரும் மூன்று ஆவணங்களில் கையெழுத்திட்ட காணொளி பதிவை தங்கள் தரப்பு கொண்டிருப்பதாக கூறிய அஹ்மட் சாஹிட் கையெழுத்திடும் போது அவர்கள் அழுத்தத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சத்தியப் பிரமாண ஆதரவு தொடர்பாக அஹ்மட் சாஹிட் மீது பெர்சத்து கட்சி முன்னதாக போலீசில் புகார் செய்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)