பொது

வழக்க நிலைக்குத் திரும்பியது ஜாலான் மஸ்ஜிட் இந்தியா

01/09/2024 06:30 PM

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, 01 செப்டம்பர் (பெர்னாமா) --  ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் காணாமல் போன இந்தியப் பிரஜை விஜயலெட்சுமையைத் தேடி மீட்கும் நடவடிக்கை ஒன்பது நாள்களுக்குப் பிறகு நேற்று நிறுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்திற்குப் பிறகு வணிகப் பகுதியான ஜாலான் மஸ்ஜிட் இந்தியா மக்களின் வருகையால் இன்று மீண்டும் பரபரப்பாகி இருப்பதை பெர்னாமா தொலைகாட்சி கண்டறிந்தது.

சம்பவ இடத்தைச் சுற்றி மஞ்சள் நிறந்திலான தடுப்புகள் போடப்பட்டு அரச மலேசிய போலீஸ் படை உறுப்பினர்களால் கண்காணிக்கப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு எதிரே ஏற்பட்ட இரண்டாவது நில அமிழ்வு இடமும் அதில் உட்படுத்தப்பட்டிருந்தது.

அடுத்த கட்ட பணிகள் அரச மலேசிய போலீஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து மஸ்ஜிட் இந்தியா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதாக கூட்டரவு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாபா நேற்று தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு அருகில் மூடப்பட்டிருந்த சில வணிக வளாகங்கள் இன்று மீண்டும் இயங்கியதால் வாடிக்கையாளர்களும் வருகைத் தந்தனர்.

இந்நிலையில், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவின் பாதுகாப்பை அதிகாரிகள் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மற்றொரு நிலவரத்தில், நில அமிழ்வு சம்பவத்தில் காணாமல் போன விஜயலட்சுமியை மீட்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதை அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் விஜயலட்சுமியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்துவதை காண முடிந்தது.

விஜயலட்சுமியின் கணவர், மகன் மற்றும் சகோதரி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)