கோலாலம்பூர், 23 டிசம்பர் (பெர்னாமா) -- இன்று, கெடா, லங்காவியில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ ஆகிய இருவருக்கும் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அச்சந்திப்பிற்காகவே, தாம் லங்காவியில் இருந்ததாகவும், ஆனால், உடல் நலக்குறைவின் காரணமாக ஓரிரு நாட்களுக்கு அச்சந்திப்பை ஒத்திவைக்குமாறு நேற்றிரவு, பிரபோவோ கேட்டுக் கொண்டதாக அன்வார் கூறினார்.
உடல் நலம் குறைவாக இருக்கும் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்பு சுமூகமாக நடைபெற வேண்டும் என்றும் தாம் பிரார்த்திப்பதாகவும் அன்வார் தமது முகநூல்ல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, வரும் வியாழக்கிழமை, லங்காவியில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவாட்டை தாம் சந்திக்க உள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.
வட்டார பிரச்சனைகள் மற்றும் ஆசியானின் வளர்ச்சி குறித்து விவாதிக்க பிரபோவோ மற்றும் தக்சினை தாம் சந்திக்கவிருப்பதாக பிரதமர் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
பிரபோவோ உடனான இருதரப்பு சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், ஆசியான் உறுப்பு நாடாக இந்தோனேசியாவின் முக்கிய பங்கை விவாதிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் அன்வார் கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)