பொது

கிளைகள் இரண்டு கத்திரிக்கோல்களைக் கொண்டு போலீசாரைத் தாக்கிய ஆடவர்

01/09/2024 06:03 PM

கோத்தா பாரு, 01 செப்டம்பர் (பெர்னாமா) --  வெள்ளிக்கிழமை அதிகாலை, கோத்தா பாரு, பாடாங் கம்போங் கிஜாங்கில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது, கிளைகள் வெட்டும் இரண்டு கத்திரிக்கோல்களைக் கொண்டு தாக்கப்பட்டதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

குற்றச்செயல் தொடர்பாக 30 வயதுக்குட்பட்ட அச்சந்தேக நபரைப் போலீஸ் குழு ஒன்று கைது செய்ய முற்பட்டபோது இச்சம்பவம் நடந்ததாக கிளந்தான் இடைக்கால போலீஸ் தலைவர் டிசிபி முஹமட் அலி தம்பி தெரிவித்தார்.

சந்தேக நபரைக் கைது செய்ய முற்பட்டபோது அவர் போலீசாரை ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதில் போலீஸ் உறுப்பினர்களில் ஒருவரின் இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டதாக சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் டிசிபி முஹமட் அலி குறிப்பிட்டார்.

பின்னர், ஒத்துழைப்பு வழங்கி சரணடையுமாறும் போலீசார் சந்தேக நபருக்கு உத்தரவிட்டனர்.

எனினும், அந்நபர் தொடர்ந்து போலீசாரைத் தாக்கியதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சந்தேக நபரின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக ராஜா பிரம்புவான் சைனாப் இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)