பொது

கிறிஸ்துமசை முன்னிட்டு இரு நாட்களுக்கு சிறைக்கைதிகளைச் சந்திக்க அனுமதி

23/12/2024 08:33 PM

கோலாலம்பூர், 23 டிசம்பர் (பெர்னாமா) -- மறுவாழ்வு மையம், சிறப்பு சீர்திருத்த மையம், சிறப்பு தடுப்புக் காவல் இடம் மற்றும் ஹென்ரி கர்னி பள்ளி உட்பட அனைத்து சிறைச்சாலைகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் சிறைக் கைதிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்களுக்கு வெளியில் இருந்து எந்தவொரு உணவு மற்றும் பானம் கொண்டுவர அனுமதி இல்லை என்று கூறிய மலேசிய சிறைச்சாலை துறை, சிறையின் சிற்றுண்டிச்சாலையில் வாங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதோடு, கிறிஸ்துவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அத்துறை தெரிவித்துள்ளது.

காலை 8.15 முதல் மாலை மணி 4.15 வரையிலான பார்வையாளர்கள் நேர விதிமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், செயல்முறைகளை எளிதாக்க, பார்வையாளர் அட்டையையும் அடையாள அட்டையையும் கொண்டு வருமாறு இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதால், கைதிகளுக்கு பணம் வழங்க ஊக்குவிக்கப்படவில்லை.

வருகையாளர்கள் பணம் கொடுக்க விரும்பினால், தேர்வுக்கான கட்டணம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முடியும் என்றும், அதற்கு அதிகாரப்பூர்வ ரசீதைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வருகைப் புரிய முடியாத குடும்ப உறுப்பினர்களுக்கு டிசம்பர் 29 தொடங்கி 31-ஆம் தேதி வரை இயங்கலை வழியான சந்திப்பும் மேற்கொள்ளப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)