பொது

6 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது

04/09/2024 04:58 PM

கோத்தா கினாபாலு, 04 செப்டம்பர் (பெர்னாமா) --  கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சபா, கோத்தா கினாபாலுவில் உள்ள MAS சரக்கு கிடங்கில் ஆறு லட்சத்து 49-ஆயிரத்து 440 ரிங்கிட் மதிப்புடைய 20.29 கிலோகிராம் METHAMPHETAMINE வகைப் போதைப் பொருளை சபா மாநில அரச மலேசிய சுங்கத்துறை கைப்பற்றியது.

மஞ்சள் நிறத்திலான நெகிழி பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்ட அந்தப் போதைப் பொருள் அனைத்தையும் சபா மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அடையாளம் கண்டதாக சபா மாநில அரச மலேசிய சுங்கத்துறை துணைத் தலைமை இயக்குநர் சித்தி மாங் தெரிவித்தார்.

"அந்த 20 பொட்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 649,440 ரிங்கிட் மதிப்புடைய 20,295 கிராம் 'Methamphetamine' அல்லது ஷாபு வகை போதைப் பொருள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அமலாக்கத் தரப்பினரைக் குழப்பும் நோக்கத்துடன் 'Guanyingwang' முத்திரையிலான மஞ்சள் நிற நெகிழியில் அவை பொட்டலமிடப்பட்டிருந்தன'', என்று அவர் கூறினார்.

அந்த பொட்டலங்களில் உள்ள முகவரியும் போலி என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அது குறித்த விசாரணையும் தொடரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

''அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39பி-யின் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்'', என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)