பொது

ஜீவனாம்சத்தைக் கோர தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவ அமைச்சு எண்ணம்

04/09/2024 05:19 PM

கோலாலம்பூர், 04 செப்டம்பர் (பெர்னாமா) --  ஜீவனாம்சத்தைக் கோருவதில் சிரமத்தை எதிர்நோக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவுவதற்கு மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு எண்ணம் கொண்டுள்ளது.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் இப்பரிந்துரை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.

''விவாகரத்து ஏற்பட்டால் பிள்ளைகளுக்கான ஜீவனாம்சத்தை அவர்கள் பெற வேண்டும். நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாததால் இது சிக்கலாக உருவாகுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ நாங்கள் அதனையும் வரவு செலவுத் திட்டத்தில் இணைத்துள்ளோம். அவர்களில் வேலை செய்யாதவர்களும் உள்ளனர். அவர்கள் எப்படி நீதிமன்றத்திற்குச் சென்று எதிர் வாதம் செய்ய முடியும்?'', என்று அவர் கூறினார்.

புதன்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் டத்தோ ஶ்ரீ நேன்சி அவ்வாறு கூறினார்.

2043-ஆம் ஆண்டில் மலேசிய மக்கள் தொகையில் 14 விழுக்காட்டினர் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்ற நிலையில் மலேசியா வயதான நாடு என்றும் வகைப்படுத்தப்படும்.

எனவே, முதியோர்களைக் கவனிக்கும் துறைக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அதன் பயிற்சிகளுக்கும் திறன்களுக்கும் அமைச்சு கவனம் செலுத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)